சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம்: மன்னிப்புக் கோரியது டெட்டால்

சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம்: மன்னிப்புக் கோரியது டெட்டால்

1 mins read
d50418f6-c288-4718-a5ed-52e95dbb9d37
துணிகளைச் சுத்தப்படுத்தும் டெட்டால் கிருமிநாசினி. - கோப்புப்படம்: ஃபேர்பிரைஸ்

பெய்ஜிங்: பாலினப் பாகுபாட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நோக்கில் பிரிட்டிஷ் சுகாதாரத் தயாரிப்பு நிறுவனமான டெட்டால் வெளியிட்ட விளம்பரம், சீனாவில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. டெட்டாலைப் புறக்கணிக்கக் கோரி குரல்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

துணிகளைச் சுத்தப்படுத்தும் கிருமிநாசினி ஒன்றை விளம்பரப்படுத்துவதற்காக, கடந்த மே இறுதியில் ஐந்து நிமிட விளம்பரக் காணொளி ஒன்று பல்வேறு இணையத் தளங்களில் வெளியிடப்பட்டது.

இந்த விளம்பரம் வெளியான உடனேயே இணையவாசிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. பலரும் இந்த விளம்பரத்தை 'ஆபாசமானது, அநாகரிகமானது’ என்று வர்ணித்ததோடு, பொதுவெளியில் வெளியிடுவதற்கு முன்பாக நிறுவனத்தின் உள்வட்ட மறுஆய்வுகளில் அக்காணொளி எவ்வாறு அனுமதி பெற்றது என்றும் கேள்வி எழுப்பினர்.

ஒருவரின் ‘கற்பு அல்லது தூய்மையை’ டெட்டால் தயாரிப்புகளின் கிருமிநாசினித் திறனுடன் ஒப்பிடுவதுபோல் இந்த விளம்பரம் அமைந்திருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜூன் 21) அந்த விளம்பரம் அனைத்து இணையப் பக்கங்களிலிருந்தும் முற்றிலுமாக நீக்கப்பட்டது.

இதுகுறித்து திங்கட்கிழமை டெட்டால் வெளியிட்ட அறிக்கையில், அந்த விளம்பரம் ஒரு மூன்றாம் தரப்பு முகவையால் தயாரிக்கப்பட்டது என்றும் பாலினம் தொடர்பான தவறான எண்ணங்களை ஒழிப்பதே அதன் நோக்கம் என்றும் விளக்கமளித்தது. எனினும், இணையத்தில் பகிரப்பட்ட விளம்பரத்தின் சில பகுதிகள் அதன் உண்மையான நோக்கத்தைச் சிதைத்து, தவறான புரிதலுக்கு வழிவகுத்துவிட்டதை ஒப்புக்கொள்வதாக டெட்டால் சொன்னது.

இனிவரும் காலங்களில் தனது விளம்பரச் செயல்முறைகளை தீவிரமாக மறுஆய்வு செய்யவுள்ளதாகவும் டெட்டால் கூறியது.

குறிப்புச் சொற்கள்