டொரோண்டோ: ஏர் கனடா விமானச் சேவை நிறுவன சிப்பந்திகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நிறுவனத்தின் விமானச் சேவை முற்றிலும் இழுத்து மூடப்பட்டது. இது அந்த விமானச் சேவையில் அன்றாடம் பயணம் செய்யும் 130,000 பயணிகளிடையே பெரும் சிக்கலில் ஆழ்த்தியது.
“நாங்கள் இப்பொழுது அதிகாரபூர்வமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என சியுபிஇ (Cupe) எனப்படும் 10,000 விமானச் சேவை சிப்பந்திகளைப் பிரதிநிதிக்கும் கனடிய பொது ஊழியர் சங்கம் அறிக்கை ஒன்றில் கூறியது.
உலகின் 180 நகரங்களுக்கு நேரடியாகச் சேவை வழங்கும் ஏர் கனடா வேலைநிறுத்தம் காரணமாக தான் அனைத்து சேவைகளையும் ரத்து செய்துவிட்டதாக அறிவித்தது.
ஏர் கனடா பயணிகள் அனைவரும் விமான நிலையம் செல்ல வேண்டாம் என்றும் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது வருத்தத்தை ஏர் கனடா தெரிவித்துக்கொண்டது.
பொது ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்தில் தான் ஈடுபடப்போவதாக சட்டப்படி 72 மணிநேர அறிவிப்பு விடுத்த பின்னர், ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 12.01 மணிக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைப் பெற்றது. பின்னர் காலை 12.58 மணிக்கு வேலைநிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஏர் கனடா தனது சிப்பந்திகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்ற எதிர்பார்ப்பில் அது படிப்படியாக தனது நடவடிக்கைகளை குறைத்து வந்துள்ளது.