கோலாலம்பூர்: மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) காற்றின் தரம், சற்று முன்னேறியுள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிக்க நாடளவில் உள்ள 68 நிலையங்களில் கிட்டத்தட்ட 20 நிலையங்களில் மட்டும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது. அக்டோபர் 12ஆம் தேதி 23 நிலையங்களில் அந்த நிலை பதிவானது.
எல்லை தாண்டிய புகைமூட்டத்தால் ஜோகூர் மாநிலமே ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள கண்காணிப்பு நிலையங்களில் எட்டு நிலையங்கள் ஜோகூரில் உள்ளன. பாசிர் கூடாங்கில் ஆக மோசமான நிலை பதிவானது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அங்கு 174லிருந்து 181க்கு அதிகரித்தது.
லார்க்கின் 160லிருந்து 176க்குக் கூடிய காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, கோத்தா திங்கியில் 169ஆகப் பதிவானது.
மலாக்காவில் மூன்று கண்காணிப்பு நிலையங்களிலுமே காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டது. மாறாக, நெகிரி செம்பிலானின் சிரம்பான் நகரில் காற்றின் தரம் சற்று மேம்பட்டது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அங்கு 167லிருந்து 154க்குச் சரிந்தது. நிலாயில் அது 164லிருந்து 151க்குக் குறைந்தது.
இந்நிலையில், ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 14ஆம் தேதியும் மூடப்பட்டிருக்கும் என்று மலேசியக் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதற்கு முன் அறிவித்தார்.
சிலாங்கூர், பாகாங், சாபா, சரவாக் ஆகியவற்றில் உலு லாங்காட், சிப்பாங் வட்டாரங்களின் கல்வி அலுவலகங்களுக்குக்கீழ் வரும் பள்ளிகளும் மூடப்படும் என்று அவர் குறிப்பிட்டார். பிற மாநிலங்களிலும் வட்டாரங்களிலும் உள்ள பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்றார் அவர்.
