அமேசான், கூகல் இணைந்து மேகக் கணிமைச் சேவை

2 mins read
92752f61-bdca-429e-82f0-db2f8ca6bf3b
கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அமேசான் இணையச் சேவையில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான இணையத் தளங்கள் முடங்கின. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகல் இணைந்து புதிய பலதரப்பு மேகக் கணிமைச் சேவையை (multi-cloud networking service) அறிமுகம் செய்துள்ளன.

அது ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

“சீரான நல்ல இணையச் சேவைக்கு அனைத்துலக அளவில் தேவையுள்ளது. சிறிய இணையத் தடங்கல்கள் கூட நிறுவனங்களுக்குப் பெரிய இழப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால் இந்தக் கட்டமைப்புச் சேவையை உருவாக்கினோம்,” என்று இரு நிறுவனங்களும் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

“இந்தப் புதிய இணையச் சேவை கட்டமைப்பை வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் வழங்க முடியும். இதற்கு முன்னர் இவ்வகைச் சேவைகளை வழங்கச் சில வாரங்கள் எடுத்தன,” என்று அவை குறிப்பிட்டன.

கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அமேசான் இணையச் சேவையில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான இணையத் தளங்கள் முடங்கின. ஸ்னேப்சேட் (Snapchat), ரெட்டிட் உள்ளிட்ட செயலிகளும் தடுமாறின.

இணையச் சேவையில் தடங்கல் ஏற்பட்டதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு 500 மில்லியன் டாலர் முதல் 650 மில்லியன் டாலர் வரை இழப்புகள் ஏற்பட்டதாக பேராமெட்ரிக்ஸ் (Parametrix) நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன.

அமேசான், கூகல் இணைந்து வழங்கும் இந்தப் புதிய சேவை, நிறுவனங்களின் கட்டமைப்புகளை வலுவாக்கவும் அவை திறம்படச் செயல்படவும் உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது தரவுகளை ஒரு கட்டமைப்பிலிருந்து வேறு கட்டமைப்புக்கு எளிதாக மாற்றம் செய்யவும் உதவும் எனச் சொல்லப்படுகிறது.

புதிய சேவையை சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) நிறுவனம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூகல் கிளவுட் தெரிவித்துள்ளது.

உலக அளவில் இணையச் சேவையை வழங்கும் முன்னணி நிறுவனங்களாக மைக்ரோசாஃப்ட், கூகல் உள்ளன. மூன்றாவது இடத்தில் அமேசான் உள்ளது.

குறிப்புச் சொற்கள்