சோல்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஹியூண்டே ஆலையில் அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் 475 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தென்கொரியர்கள். இந்தச் சம்பவம் செப்டம்பர் மாதத்தில் நிகழ்ந்தது.
இதன் விளைவாக அந்த ஆலைக்கான கட்டுமானப் பணிகள் தடைப்பட்டன.
இந்நிலையில், ஆலையில் அதிரடிச் சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக ஹியூண்டே மோட்டாரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோசே முனோஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அமெரிக்காவில் தனது விரிவாக்கத் திட்டத்தை ஹியூண்டே தொடரும் என்றார் அவர்.
அமெரிக்காவில் தொடர்ந்து முதலீடு செய்ய ஹியூண்டே உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் தூய எரிசக்தித்துறையில் தென்கொரியா பில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது.
செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையை அடுத்து, கைது செய்யப்பட்ட ஹியூண்டே ஆலை ஊழியர்களின் மணிக்கட்டுகள், இடை, கணுக்கால்களில் விலங்கு மாட்டப்பட்டன.
இதைக் காட்டும் காணொளிகளைப் பார்த்து தென்கொரியாவில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

