புத்ராஜெயா: மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உடன்பாடு தொடர்பாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீது முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
மலேசியக் கூட்டரசில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளவர்களின் முழுமையான அனுமதியைப் பெறாமல் அன்வார் செயல்பட்டுள்ளார் என டாக்டர் மகாதீர் கூறியதாக ‘சினார் ஹரியான்’ மலாய் நாளிதழ் தெரிவித்துள்ளது.
“மலேசியக் கூட்டரசில் அவர் (திரு அன்வார்) மட்டுமே பிரதிநிதி அல்ல என்பதால் அவர் ஏற்படுத்திய உடன்பாடு செல்லாது. மலேசிய மாமன்னரும் நாடாளுமன்றம், ஆட்சி மன்றம் போன்றவையும் அதுபோன்ற உடன்பாட்டுக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும்,” என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகாரைச் சமர்ப்பித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அனுமதி பெறவேண்டிய நான்கு தரப்புகளிடம் இருந்து அனுமதி பெறாமல் ஏற்படுத்திய உடன்பாடு அரசியலமைப்புக்கு உட்படாது என்று அப்போது அவர் கூறினார்.
“400 பக்கங்களுக்கு நீண்டுள்ள உடன்பாடு பற்றி பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நமது நாட்டின் அதிகாரங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்குரிய பல அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
“என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றித் தீர்மானிக்கும் உரிமையை அவர்களிடம் தருவதுபோல் உள்ளது,” என்று டாக்டர் மகாதீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தேசியச் சட்டங்களையும் அரசியலமைப்புச் சட்டங்களையும் திரு அன்வார் மீறி இருக்கிறாரா என்பது பற்றி காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதே விவகாரம் தொடர்பில் தனிப்பட்டவர்களும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தோரும் 139க்கும் மேற்பட்ட புகார்களைக் காவல்துறையிடம் செய்துள்ளதாகவும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

