கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) அன்று தமது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் புதிய பொறுப்புகளை அறிவிக்கும் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
மக்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்காக, நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் கொள்கை அமலாக்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று அவர் கூறினார்.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறையின் புதிய அமைச்சராக ஜொஹாரி அப்துல் கனி நியமிக்கப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும். இது முன்பு செனட்டர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜிசால் வழிநடத்தப்பட்ட ஓர் அமைச்சாகும்.
டிஏடி கட்சியின் புக்கிட் மெர்தாஜம் எம்.பி.யான ஸ்டீவன் சிம், தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளையில், சுங்கை பூலோவின் பிகேஆர் கட்சியின் எம்.பி.யான ரமணன் ராமகிருஷ்ணன் மனிதவள அமைச்சராக, திரு சிம்மிற்குப் பதிலாக மாற்றப்பட்டுள்ளார்.
பொருளியல் அமைச்சராக அக்மல் நசருல்லா முகம்மது நசிர் பொறுப்பேற்கிறார். இளையர், விளையாட்டுத்துறை அமைச்சராக டாக்டர் முகம்மது தவ்ஃபிக் ஜொஹாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக அமைச்சராக (கூட்டரசு பிரதேசம்) ஹன்னா இயோவும், தோட்டத்துறை மற்றும் மூலப்பொருட்கள் துறை அமைச்சராக டாக்டர் நோராய்னி அகம்மதுவும், பிரதமர் அலுவலக அமைச்சராக (சாபா, சரவாக் விவகாரங்கள்) முஸ்தஃபா சக்முட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளியலின் நிலை, பணவீக்கம், வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் மெதுவான வேகம் குறித்த கவலைகளுக்கு மத்தியிலும் கருத்துக் கணிப்புகளில் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திரு அன்வார் கடைசியாக டிசம்பர் 2023ல் தனது அமைச்சரவையில் பெரிய மாற்றங்களைச் செய்தார் என்று தி ஸ்டார் ஊடகச் செய்தி குறிப்பிடுகிறது.
மலேசியாவின் அமைச்சரவையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்களும், மேலவையில் நியமிக்கப்பட்ட செனட்டர்களும் உள்ளனர்.

