கேப்டவுன்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உறுதிகொண்டுள்ளனர்.
பொருளியல், வர்த்தகம், கல்வி, புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று பக்கபலமாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
“ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இருதரப்பு உறவுகுறித்து பேசினோம்,” என்று திரு அன்வார் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
“சந்திப்பில் இருநாட்டு உறவை மறுவுறுதி செய்துகொண்டோம். முக்கியமான துறைகளில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும். இதன்மூலம் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பு மேலும் விரிவடையும்,” என்று திரு அன்வார் கூறினார்.
“மலேசியாவும் இந்தியாவும் ஒன்றாகச் செயல்படுவதால் உத்திபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது,” என்றார் அவர்.
“நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றைப் பின்பற்றுவதன்மூலம் அந்த வட்டாரம் ஆற்றலை மேம்படுத்தும் புதிய வளர்ச்சி மையமாக மாறக்கூடும்,” என்று மலேசியப் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் மோடியும் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள ஒத்துழைப்பையும் நட்பையும் பாராட்டினார். இந்தியாவும் மலேசியாவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
“திரு அன்வாருடனான சந்திப்பு அருமையாக இருந்தது. இருதரப்பு ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து செயல்படுவதில் இந்தியாவும் மலேசியாவும் கவனம் செலுத்தும்,” என்று மோடி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி20 உச்சநிலை மாநாடு நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடந்தது. அதில் சிங்கப்பூர், இந்தியா, சீனா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றியம் உட்படப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

