கோலாலம்பூர்: மலேசியர்களின் செலவினம் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளது.
மக்களின் கையில் கூடுதல் பணம் புழங்கச் செய்யும் அன்வாரின் அரசாங்க வெற்றிக்கு இது சான்றாகத் திகழ்கிறது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த மூன்று வரவுசெலவுத் திட்டங்களும் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிமுகப்படுத்திய திட்டங்களும் சாமானிய மக்களுக்கு உதவும் நோக்கில் அமைந்துள்ளன.
இப்போது நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அன்வார் அரசாங்கம், கொள்கைகளை நடைமுறைத் திட்டங்களாக மாற்றி மக்கள் நலனை மேம்படுத்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், உணவுப் பொருள்களின் விலை உயர்வால் வாழ்க்கைச் செலவினம் கூடியுள்ளது. மேலும், போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள முற்றுகையால் கப்பல் போக்குவரத்துச் செலவுகளும் வரிகளும் அதிகரித்துள்ளன.
இத்தகைய சவால்களுக்கு இடையிலும், மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் மானியங்களை உயர்த்தியுள்ளது.
குறிப்பாக, பி40 பிரிவினருக்கு உதவ ‘சாரா’, ‘ஸ்ட்ர்’ போன்ற நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் மானியச் செலவு 2021ஆம் ஆண்டைவிட 322 விழுக்காடு அதிகரித்து, 55.4 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் வேளையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு மலேசிய அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்குவதால் மக்களுக்குக் குறைந்த விலையில் எரிபொருள் தடையின்றிக் கிடைக்கிறது.
‘மடானி பொருளியல் கட்டமைப்பின்’கீழ் மலேசியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுத்து வருகிறது.
மேலும், வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2.9 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் 117 தரவு நிலையத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 55 நிலையங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கியுள்ளன.
