கோலாலம்பூர்: ரமலான் நோன்பு மாதம் முழுவதும் புனித ரமலான் நிகழ்ச்சிகளை அனைத்து அமைச்சிலும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நடத்துவார் என அவரது மூத்த ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைடா தெரிவித்தார்.
ரமலானை வழிபாட்டு ரீதியாக ஒரு ‘மதரஸா’வாக மாற்றுவது மட்டுமல்லாமல், மலேசிய அரசாங்கத்தின் மதிப்புகளையும் நெறிமுறைகளையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார் அவர்.
பல்வேறு அமைச்சுகளுக்குச் சென்று அரசு ஊழியர்களுடன் பிரதமர் அன்வார் கலந்துரையாடுவார் எனக் கூறிய திரு அபைடா, அதைத் தொடர்ந்து அவரே சுருக்கமான சமய உரைகளை நிகழ்த்துவார் எனவும் கூறினார்.
மேலும், சமயப் பேச்சாளர்களும் அந்நிகழ்ச்சிகளில் போதனைகள் வழங்க அழைக்கப்படுவர் என்றும் அவர் சொன்னார்.
“இத்திட்டத்தின் மூலம், அரசு ஊழியர்களிடையே நேர்மை, ஒழுக்கம், பொறுப்பு போன்ற மதிப்புகளை மதானி கட்டமைப்பின்கீழ் நல்வாழ்வுக்கு ஏற்ப வலுப்படுத்த முடியும்,” எனத் திரு அபைடா தனது பேச்சில் குறிப்பிட்டார்.
மலேசியப் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமையன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட தினசரி பிரதமர் அலுவலகத் தகவல்கள் திட்டம் தொடர்பான விளக்கக்கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
மதானி நோன்பு கூட்டங்களில் மக்களைச் சந்திப்பதோடு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ரமலான் மாதத்தில் பல மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லவும் பிரதமர் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளுக்கான குறிப்பிட்ட தேதி, இடம் போன்றவை விரைவில் அதிகாரபூர்வ அரசாங்க ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றார் திரு அபைடா.
தொடர்புடைய செய்திகள்
ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்பதை பிரதமர் அலுவலகம் ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

