புத்ராஜெயா: மலேசியப் போக்குவரத்து அமைச்சராகத் திரு ஆன்டனி லோக் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகச் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரான லோக் தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிரதமர் அன்வார் இவ்வாறு கூறியுள்ளார்.
புத்ராஜெயாவில் உள்ள போக்குவரத்து அமைச்சு வளாகத்தில் ஓட்டுநர்களுக்கு ஒருமுறைக்கான உதவித்தொகையை வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அன்வார், வீட்டுக் காவல் தொடர்பான முடிவு பிரதமரின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்று விளக்கினார்.
நாட்டின் அரசியலமைப்பின்படி இத்தகைய முடிவை எடுக்கும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உள்ளது என திரு லோக்கிடம் தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்த பிரதமர் அன்வார், அவரைத் தொடர்ந்து பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் எஞ்சிய சிறைத்தண்டனையை இல்லக் காவலில் நிறைவேற்ற பொது மன்னிப்பு வாரியம் அனுமதி வழங்கியது. இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரு லோக் செப்டம்பர் 28ஆம் தேதி தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
நஜீப் இல்லக் காவலைத் தொடங்கும் நாளில் தமது பதவி விலகல் அமலுக்கு வரும் என்றும் அதுவரை பதவியில் நீடிக்குமாறு பிரதமர் அன்வார் தம்மைக் கேட்டுக்கொண்டதாகவும் திரு லோக் கூறியிருந்தார்.
நாட்டிற்குப் புகழ்பெற்ற, கொள்கைமிக்க நல்ல தலைவர்கள் தேவை என்று கூறிய அன்வார், ஊழலில் ஈடுபடுபவர்களே பதவியை விட்டு விலக வேண்டும் என்றார்.
அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டும் அரசியல்வாதிகளைப் பொருட்படுத்தக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களால் மட்டுமே சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டாக்சி ஓட்டுநர்கள், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு வரவுசெலவுத் திட்டத்தின்கீழ் சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அவர்களின் உயர்ந்து வரும் எரிபொருள், செயல்பாட்டுச் செலவுகளைக் கருத்தில் கொண்டு உதவி செய்யும் என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
