சிரம்பான்: ஆகாயப் படைச் சொத்துகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் எவரும் தப்பிக்க முடியாது என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.
அதில் ஈடுபட்டவர்கள் ஊழல், ராணுவ விமானங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாட்டிற்குத் துரோகம் இழைத்துள்ளதாக அவர் கூறினார்.
“என்னிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளவரை, நீங்கள் நாட்டிற்குத் துரோகம் இழைத்து, ஊழலில் ஈடுபட்டு, போதைப்பொருள் கடத்துவதற்கு ஆகாயப் படை விமானத்தைப் பயன்படுத்தினால், உங்களுக்குக் கோபம் வந்தாலும் பரவாயில்லை, அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.
“நான் இந்த விவகாரத்தை நீட்டிக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் இதைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று சனிக்கிழமை (நவம்பர் 28) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் கூறினார்.
“கடந்த சில நாள்களாக, பல நூறு மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள்களைக் கடத்துவதற்கு ராணுவ விமானங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது,” என்றார் திரு அன்வார்.
இந்நிலையில், தற்காப்பு அமைச்சு இந்த விவகாரத்தில் எந்தவிதச் சமரசமும் செய்துகொள்ளாது என்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்கத் தயாராக உள்ளது என்றும் தற்காப்பு அமைச்சர் காலித் நூர்டின் தெரிவித்துள்ளார்.
அந்தக் குற்றம் ராணுவச் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், கடுமையான குற்றச் செயலையும் உள்ளடக்கியிருப்பதால் இத்தகைய உறுதியான நடவடிக்கை அவசியம் என்றார் அவர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை மலேசிய ஆயுதப் படை அதிகாரிகள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் திரு காலித் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட எட்டுப் பேரில், மூவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எஞ்சிய ஐவரிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
