சான் ஃபிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் நீண்டகால நம்பர் 2 அதிகாரியாகவும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் இருந்த ஜெஃப் வில்லியம்ஸ் ஓய்வுபெறுகிறார். ஐஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், ஏற்கெனவே கொந்தளிப்பான காலத்தைச் சந்தித்து வரும் நிலையில், இது ஒரு பெரிய நிர்வாக மாற்றத்தைக் குறிக்கிறது.
திரு வில்லியம்ஸ், ஆப்பிளின் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஒருவராக நீண்டகாலமாக அறியப்பட்டவர். மேலும் அவரது விலகல், நிறுவனத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் வெளியேறும் வரை, வடிவமைப்புக் குழுவை மேற்பார்வையிடுவதோடு, சுகாதார முன்னெடுப்புகளையும் திரு வில்லியம்ஸ் தொடர்ந்து நிர்வகிப்பார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிள் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த திரு சபீஹ் கான், 59, திரு வில்லியம்சுக்குப் பதிலாக தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் பிறந்தவர் திரு கான். 1966ல் தமது பள்ளிப்படிப்பின்போது சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த அவர், பின்னர் இங்கிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார்.
டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல், பொறியியல் பாடப் பிரிவுகளில் இளநிலைப் பட்டத்தையும் பின்னர் பொறியியலில் முதுநிலைப் பட்டத்தையும் திரு கான் பெற்றார்.
ஆப்பிளின் வடிவமைப்புக் குழு நேரடியாக தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கின்கீழ் பணியாற்றும் என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) ஆப்பிள் அறிவித்தது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு கான் புதிய பொறுப்பைத் தொடங்கும்போது, வரிச் செலவுகள் முதல் ஐஃபோன் விற்பனை வளர்ச்சி குறைவது வரையிலான சவால்களை அவர் சமாளிக்க வேண்டியிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
அவரது புதிய பதவி, நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிக்கல்கள் உட்பட மற்ற சவால்களிலும் அவர் அதிக ஈடுபாடுகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.