தோக்கியோ: பதவிக்கு வந்த ஓராண்டுக்குள்ளேயே அந்தப் பதவியிலிருந்து விலகப்போவதாக ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபா அறிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வைத் தொடர்ந்து மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி (எல்டிபி) பெரும்பான்மையை இழந்துவிட்டது. கூட்டணிக் கட்சியான கெமெய்டோவின் ஆதரவுடன் அந்தக் கட்சி ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) பிரதமர் அலுவலகத்தில நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு இஷிபா, ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
அவரது உரை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
உடனடியாகப் பதவி விலகும் எண்ணம் இல்லை என்றும் சரியான நேரத்திற்காகக் காத்திருப்பதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் கூறியிருந்த வேளையில், தற்போது அந்த நேரம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
ஜூலையில் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் எல்டிபி தோல்வியடைந்தது. அப்போதிருந்து, பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அவரது சொந்தக் கட்சியினரே திரு இஷிபாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த உட்கட்சி நெருக்கடி, அவரது பதவி விலகலால் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்கவே அவர் பதவி விலக முன்வந்திருப்பதாக அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான என்எச்கே கூறியது.
செய்தியாளர்களிடம் பேசிய திரு இஷிபா, “பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்க மாட்டேன் என்று நான் எப்போதும் கூறி வந்துள்ளேன். அதேநேரம் உரிய நேரம் வரும்போது நான் முடிவெடுப்பேன்.
தொடர்புடைய செய்திகள்
“ஓர் அதிபர் என்ற முறையில் தேர்தல் முடிவுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன். அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதால், நான் பதவி விலக இதுதான் தக்க தருணம் என்று கருதுகிறேன்,” என்று கூறினார்.
அடுத்த பிரதமர் தேர்ந்து எடுக்கப்படும் வரை தாம் அந்தப் பதவியில் தொடரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவரது பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து எல்டிபி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைமைத்துவத் தேர்தலை நடத்துவது குறித்து அந்தக் கூட்டத்தில் அவர்கள் முடிவெடுக்க உள்ளனர்.
அடுத்தடுத்து தோல்வி
78 வயதாகும் திரு இஷிபா கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் பதவி ஏற்றதும் அதே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கீழவைத் தேர்தலில் அவரது எல்டிபி கட்சி தோல்வியடைந்தது.
பின்னர், இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தோக்கியோ பெருநகர மன்றத் தேர்தலிலும் ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைத் தேர்தலிலும் ஆளும் கட்சியின் தோல்வி தொடர்ந்தது.
மூன்று தோல்விகளைத் தொடர்ந்து, திரு இஷிபா பதவி விலக வேண்டும் என்று அவரது எல்டிபி கட்சியினரே வலியுறுத்தத் தொடங்கினர்.
ஜப்பானின் நீண்டகாலப் பிரதமர் என்ற பெருமைக்குரிய ஷின்சோ அபே கடந்த 2020ஆம் ஆண்டு பதவி விலகிய பின்னர், அடுத்தடுத்து அந்தப் பதவியைத் துறக்கும் மூன்றாவது தலைவர் திரு இஷிபா என்பது குறிப்பிடத்தக்கது.
திரு அபே, 2022ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு அவரால் கட்சியிலும் ஆட்சியிலும் ஏற்பட்ட வெற்றிடத்தை எல்டிபியால் நிரப்ப இயலவில்லை.
அடுத்த பிரதமர்
அடுத்த ஜப்பானியப் பிரதமருக்கான போட்டியில் இருவர் முன்னணியில் உள்ளனர். வேளாண்மைத் துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, 44, முன்னாள் பொருளியல் பாதுகாப்பு அமைச்சர் சனே தகாய்ச்சி, 64, ஆகியோர் அவர்கள்.