சிட்னி: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைவானோர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்கான தடை புதன்கிழமை (டிசம்பர் 10) நடப்புக்கு வந்துள்ளது.
உலகில் அத்தகைய தடையை அறிமுகப்படுத்தியுள்ள முதல் நாடு ஆஸ்திரேலியா. அதன்படி, டிக்டாக், யூடியூப், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை 16 வயதுக்குக் குறைந்தவர்கள் இனி பயன்படுத்த முடியாது.
பிள்ளைகள் நாடினால் அதனைத் தடுக்குமாறு ஆகப் பெரிய 10 சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை மீறுவோர் புதிய சட்டத்தின்படி A$49.5 மில்லியன் (S$42.6 மில்லியன்) அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். புதிய சட்டத்தைப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் பேச்சுரிமைக்கு ஆதரவளிக்கும் இயக்கங்களும் குறைகூறின. ஆனால், பெற்றோரும் பிள்ளைநல ஆர்வலர்களும் அதனை வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
புதிய தடையை மற்ற நாடுகள் அணுக்கமாகக் கண்காணிக்கின்றன. அத்தகைய தடையை நடைமுறைப்படுத்தலாமா என்பது குறித்தும் அவை யோசிக்கின்றன. பிள்ளைகளின் உடல்நலத்திலும் பாதுகாப்பிலும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த கவலை அதிகரித்துவரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் புதிய தடை நடப்புக்கு வந்துள்ளது.
இளம் ஆஸ்திரேலியர்களுக்கு ஆதரவளிப்பதே புதிய தடையின் நோக்கம் என்றார் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி. சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட தகவல்களால் எழக்கூடிய நெருக்குதலைத் தணிக்கவும் புதிய தடை உதவும் என்றார் அவர். சமூக ஊடகத் தடை குறித்துத் திரு அல்பனீசி பேசிய உரை, பள்ளிகளில் ஒளிபரப்பப்படும் என்று ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியா தெரிவித்தது.
“கைப்பேசியைக் கைவிட்டுப் பள்ளி விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். புதிய விளையாட்டைத் தொடங்குங்கள். புதிய இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வாசிப்பதற்காக உங்கள் மேசையில் காத்திருக்கும் புத்தகத்தை எடுத்துப் படியுங்கள். முக்கியமாக, உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் நேருக்கு நேராகப் பார்த்துப் பேசுங்கள், பழகுங்கள்,” என்றார் அவர்.
டென்மார்க் முதல் மலேசியா வரை, பல நாடுகள் ஆஸ்திரேலியாவைப் போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடுவதாகக் கூறியுள்ளன.
மெட்டா நிறுவனம், பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குரிய அம்சங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆஸ்திரேலியாவின் புதிய தடை 10 சமூக ஊடகங்களுக்குப் பொருந்தும். புதிய சமூக ஊடகங்கள் வரவர, தடையும் விரிவுபடுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டது.

