சிட்னி: ஆஸ்திரேலியா, அதன் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை ஒன்பது விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதனால் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட 295,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் கல்வி விசா கிடைக்கும்.
மேலும் தென்கிழக்கு ஆசிய மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மை ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவானது. இதனால் சொத்துச் சந்தையில் அதிகத் தாக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் வீட்டு விலை கடுமையாக உயர்ந்தது.
இதைச் சமாளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவைக் குறைத்தது. இவ்வாண்டு 270,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் விசா வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2026ஆம் கல்வி ஆண்டுக்குக் கூடுதலாக 25,000 இடங்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
“எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் அனைத்துலக கல்வி வளர்ச்சி, ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு வாய்ப்பு, பல்கலைக்கழக வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி,” என்றார் ஆஸ்திரேலியக் கல்வி அமைச்சர் ஜேசன் கிளார்.
2023ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 600,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா விசா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

