ஈராக்கில் தடுத்துவைக்கப்பட்ட ஆஸ்திரேலியப் பொறியாளர் விடுதலை

ஈராக்கில் தடுத்துவைக்கப்பட்ட ஆஸ்திரேலியப் பொறியாளர் விடுதலை

படம்: டெஸ்ரி பெர்த்

12 Oct 2026 - 4:58 pm

1 mins read

கான்பெரா: ஈராக்கில் ஐந்து ஆண்டுகளுக்குமுன் தடுத்துவைக்கட்ட ஆஸ்திரேலியப் பொறியாளர் ராபர்ட் பெர்த் தாயகம் திரும்பவுள்ளார்.

ஈராக் மத்திய வங்கிக்கும் அவர் பணியாற்றிய சிஎம்இ கன்சல்டிங் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தச் சிக்கலில், 2021ஆம் ஆண்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐக்கிய நாட்டு நிறுவனக் கூற்றுப்படி, ஈராக்கில் 51 வயதான பெர்த் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

மேலும், அந்த வணிகத் தகராறுக்கு அவரது நிறுவனம் பொறுப்பாகாது என அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது, அயர்லாந்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் மீண்டும் சேர பெர்த் பயணம் மேற்கொண்டுள்ளதை ஆஸ்திரேலிய அரசு திங்கட்கிழமை (அக்டோபர் 12) உறுதிப்படுத்தியது.

ஆஸ்திரேலியா, அயர்லாந்து அதிகாரிகளின் பல ஆண்டுகாலத் தொடர் முயற்சியால் இந்த விடுதலை சாத்தியமானதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், பெர்த்தின் கைது அனைத்துலகச் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அவர் கொடூர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், ஈராக் அரசு அக்குற்றச்சாட்டுகளை மறுத்தது.

குறிப்புச் சொற்கள்