சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல் அமைச்சர், கடந்த 30 ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் பிறகு, துப்பாக்கி எதிர்ப்புச் சட்டங்களில் பரந்த அளவிலான சீர்திருத்தங்களை நிறைவேற்ற அடுத்த வாரம் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப் போவதாகப் புதன்கிழமை (டிசம்பர் 17) அன்று கூறினார்.
டிசம்பர் 14 அன்று சிட்னியின் புகழ்பெற்ற போண்டாய் கடற்கரையில் யூத ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின்போது தந்தை-மகன் குற்றவாளிகள் என்று கூறப்படும் நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதல் நாட்டையே உலுக்கியது. யூத எதிர்ப்பு, வன்முறை தீவிரவாதம் அதிகரித்து வருமோ என்ற அச்சத்தை அதிகரித்தது.
தாக்குதலில் பலியான யூதர்களின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 17 அன்று தொடங்கின. துப்பாக்கிக்காரர்களில் ஒருவர், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தாரா என்று புலனாய்வு செய்யப்பட்டார். மேலும் சக்திவாய்ந்த துப்பாக்கிகளை அவர்கள் பெற அனுமதிக்கப்பட்ட விதம் குறித்த கோபத்தில் மக்கள் உள்ளனர்.
தாக்குதல் நடந்த நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல் அமைச்சர் கிறிஸ் மின்ஸ், டிசம்பர் 22ஆம் தேதியன்று கூடும் நாடாளுமன்றத்தில், ஒருவர் பெறக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், சில வகையான துப்பாக்கிகளை அணுகுவதைக் கடினமாக்குதல் உள்ளிட்ட ‘அவசர’ சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்று டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பயங்கரவாத சம்பவங்களுக்குப் பிறகு, மேலும் பதற்றங்களைத் தடுக்க, பெரிய சாலைப் போராட்டங்களை நடத்துவதை கடினமாக்கும் சீர்திருத்தங்களையும் மாநில அரசு பரிசீலிக்கும்.
“நமக்கு முன்னால் ஒரு மகத்தான பணி உள்ளது. அது மிகப்பெரியது. சமூகத்தை ஒன்றிணைப்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. அது பிரிவினை அல்ல. அமைதி மற்றும் ஒற்றுமையின் பலம் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன்,” என்று திரு மின்ஸ் கூறினார்.

