ஷா அலாம்: மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைச் செயலாளராக அஸ்மின் அலி நியமிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 9ஆம் தேதியன்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உச்ச மன்றம் கூடும்போது அவர் தலைமைச் செயலாளராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைச் செயலாளராக அஸ்மின் அலியை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் ஹம்சா ஸைனுதீன் கூறினார்.
“அரசமைப்புச் சட்டத்தின்கீழ், தலைமைச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கூட்டணித் தலைவருக்கு உள்ளது. அஸ்மின் அலி தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூட்டணித் தலைவர் அறிவிக்கும்போது அது உச்ச மன்றக் கூட்டத்தில் உறுதி செய்யப்படும்,” என்று திரு ஹம்சா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்படி ஒன்றும் இல்லை என்று திரு ஹம்சா தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் ஒரு பெரிய கூட்டணி என்றும் பாஸ் கட்சியுடன் சேர்த்து அதில் மில்லியன்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
எனவே, வெவ்வேறு கருத்துகள் நிலவுவது இயல்பு என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த உச்ச மன்றக் கூட்டத்தின்போது அனைவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டோம். தோல்வி அடைந்தவர்களும் கூட்டணியில் தொடர்ந்து இருக்கின்றனர்,” என்று திரு ஹம்சா தெரிவித்தார்.

