ஏர்பிஎன்பியைத் தடை செய்யத் திட்டமிடும் பாலி

1 mins read
74798a26-17e0-4bd3-9fed-04314353ad54
பாலியில் 2,000க்கும் மேற்பட்ட ஹோட்டல்களும் வில்லாக்களும் உரிமமின்றிச் செயல்படுவதாக ஆளுநர் தெரிவித்தார். அவை தடைசெய்யப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். - படம்: ஏஎஃப்பி

பாலி:  பாலி அரசாங்கம், ஏர்பிஎன்பியைத் தடைசெய்யத் திட்டமிடுகிறது. அதிகரித்துவரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கத் திணறுகிறது அதன் சுற்றுலாத் துறை.

அண்மை ஆண்டுகளில் ஏர்பிஎன்பி பாணியிலான தங்குமிடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் கூடியுள்ளது. அதனால் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதும் ஹோட்டல்களில் இருந்து கிடைக்கும் வரித்தொகை குறைந்துள்ளது. அந்தத் தகவலைத் தீவின் ஆளுநர் ஐ வயான் கோஸ்டர், அரசாங்க ஊடகமான அந்த்தாரா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பதிவுசெய்யப்படாத வில்லாக்களும் விருந்தினர் இல்லங்களும் அதிகரிப்பதால் பொதுச் சேவைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதில் அரசாங்கம் சிக்கலை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார்.

இந்தோனீசியாவின் தீவுச் சொர்க்கம் என்று வருணிக்கப்படும் பாலியின் மக்கள்தொகை கிட்டத்தட்ட நான்கு மில்லியன். கொவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, அங்குச் சுற்றுலாத் துறை அதிவிரைவாக வளர்ச்சி கண்டுவருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. கட்டடங்கள் பெருகியுள்ளன. சுற்றுப்புறத்துக்கு அதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உல்லாசத்தலங்களுக்கும் சொகுசு ஹோட்டல்களுக்கும் மாற்றாக வந்துள்ள ஏர்பிஎன்பி தங்குமிடங்களுக்கான கட்டணம் மிகவும் குறைவு.

உள்ளூர் அரசாங்கம், சுற்றுலாத் துறைக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது. அனைத்துலகச் சுற்றுப்பயணிகளுக்குப் புதிய தீர்வை விதிக்கப்பட்டுள்ளது. உரிமமின்றித் தங்குமிடங்களை நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரியால் கிடைக்கக்கூடிய வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்பதே புதிய விதிமுறைகளின் நோக்கம் என்றது உள்ளூர் அரசாங்கம்.

பாலியில் 2,000க்கும் மேற்பட்ட ஹோட்டல்களும் வில்லாக்களும் உரிமமின்றிச் செயல்படுவதாக ஆளுநர் தெரிவித்தார். அவை தடைசெய்யப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்