மலேசியக் குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை; பதின்ம வயதினருக்குக் கட்டுப்பாடு

2 mins read
4fc27832-c71d-49d5-84c7-024e3d50660d
மலேசியாவின் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்ஸில். - படம்: ஊடகம்

கோலாலம்பூர்: பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தாதவாறு தடை கொண்டு வருவது பற்றியும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக உள்ளடக்கங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிப்பது பற்றியும் மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இதனை மலேசிய தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை இணையத் தீங்குகளில் இருந்து பாதுகாக்கவும் இளம் பருவத்தினருக்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கவும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ஒழுங்குமுறை விதிகளைத் தயாரித்து வருவதாக, நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது அவர் கூறினார்.

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக் போன்ற சமூகத் ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதில் இருந்து, 16 வயதுக்குட்பட்டவர்களைத் தடுக்க சட்டம் கொண்டுவரும் எண்ணம் அரசாங்கத்துக்கு உள்ளதா என்று பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹாக் லியோங் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த திரு ஃபாஹ்மி, “தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கக் கட்டுப்பாடு விதிப்பதற்கான முறைகளை பெற்றோருக்கு அளிக்குமாறு இணையச் சேவை வழங்குநர்களும் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

“அத்தகைய நிறுவனங்கள், இணையப் பாதுகாப்புத் திட்டங்களைத் தயார் செய்யவேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு எவ்வாறு இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அந்தத் திட்டங்களில் அவை விவரிக்க வேண்டும்.

“இணையத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

“மேலும், எளிதில் பாதிப்படையக்கூடிய பிரிவினரை, குறிப்பாக குழந்தைகளையும் பதின்ம வயதினரையும் காப்பாற்றஅரசாங்கம் விரிவான அணுகுமுறையைச் செயல்படுத்தி வருகிறது.

“இணையத் தகவல் சேவை மற்றும் சமூக ஊடகச் சேவை வழங்கும் நிறுவனங்கள் உரிமம் பெற்று அந்தச் சேவைகளை வழங்க வேண்டும். உரிமத்திற்கு அவை தகுதிபெறவேண்டும். தொடர்புத் தகவல் மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 (பிரிவு 588)ன்கீழ் அவை உரிமம் பெற வேண்டும் ஆகியனவும் அரசாங்கம் பரிசீலித்து வரும் அம்சங்களில் அடங்கும்.

“உள்ளடக்க ஒழுங்குமுறைகளுக்கும் வழிமுறைகளை நிர்வகிப்பதற்கும் அந்நிறுவனங்கள் பொறுப்பேற்பதை அவை உறுதி செய்கின்றன.

“தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உள்ளடக்கம் மற்றும் கட்டமைப்புச் சேவை வழங்குநர்களின் கடமைகளை வரையறுக்கவும் இணையப் பாதுகாப்புச் சட்டம் (பிரிவு 866) கொண்டு வரப்பட்டது,” என்று அமைச்சர் ஃபாஹ்மி விவரித்தார்.

கடந்த மே 22ஆம் தேதி அரசிதழில் பதிவுசெய்யப்பட்ட அந்தச் சட்டம், 2026 ஜனவரி 1 முதல் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்