தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலேசியப் போக்குவரத்து அமைச்சு, கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘கேடிஎம்’ எனப்படும் மலாயா தொடருந்துச் சேவையின் வழி இலவச ரயில் பயணங்களை வழங்க முற்படுகிறது.
பத்துமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 10, 11ஆம் தேதிகளில் முதல் நாள் நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த நாள் இரவு 11.59 மணி வரை இலவசப் பயணங்கள் கிடைக்கப்பெறும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அறிவித்தார்.
பத்துமலை கேடிஎம் நிலையத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் இந்த வசதியை அவர் அறிவித்தார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் கேஎல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, பத்துமலைக்கு அருகிலுள்ள இந்நிலையத்திற்குச் செல்ல ஏறத்தாழ அரை மணி நேரம் தேவைப்படுகிறது.
தைப்பூசத்திற்காக கேடிஎம், இத்தகைய பயணங்களை இலவசமாக வழங்குவது இது இரண்டாவது முறை.
இதனுடன், பிப்ரவரி 9ஆம் தேதியும் 12ஆம் தேதியும் மூத்தோர், உடற்குறையுள்ளோர், இரண்டு முதல் ஆறு வயது வரையிலான பிள்ளைகள் ஆகியோருக்கான ரயில் பயணக் கட்டணங்களில் 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.
இந்தக் கட்டணக் கழிவால் இம்முறை 500,000 பயணிகள் வரை பயனடைவர் என அமைச்சர் லோக் குறிப்பிட்டார்.