பிள்ளைகளைக் காப்பாற்ற உலகம் ஒன்றுபட வேண்டும்: கேட்ஸ் அறநிறுவனம் அறிக்கை

2 mins read
இளம் பிள்ளைகளின் மரண எண்ணிக்கை அதிகரிப்பு
ba744eff-df01-4c88-9a9f-042e27169ad8
கென்யாவின் வடக்குப் பகுதியில் ஏழ்மையில் வாழும் குடும்பம்.  - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: ஐந்து வயதை எட்டுவதற்கு முன்னரே உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை, இந்த நூற்றாண்டில் முதன்முறையாக உயரக்கூடும்.

பல்லாண்டுகளாக ஏற்பட்டுவந்த முன்னேற்றத்திற்கு எதிர்த்திசையில் இந்தப் புதிய போக்கு செல்வதாகத் தகவல் வெளியிட்ட கேட்ஸ் அறநிறுவனத்தின் 2025 கோல்கீப்பர்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.

2024ல் கிட்டத்தட்ட 4.6 மில்லியன் பிள்ளைகள், தங்கள் ஐந்தாவது பிறந்தநாளை எட்டுவதற்கு முன்னரே ஏதேனும் சுகாதாரப் பிரச்சினை காரணமாக உயிரிழந்துவிட்டனர். 

இவ்வாண்டு இந்த எண்ணிக்கை, 4.8 மில்லியனாக உயரக்கூடும் என டிசம்பர் 4ல் வெளிவந்த அந்த அறிக்கையில் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சுகாதார மேம்பாட்டுக்கான உதவி இவ்வாண்டு, கடந்த ஆண்டைக் காட்டிலும் 26.9 விழுக்காடு குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

கடன்சுமை அதிகரிப்பு, சுகாதாரக் கட்டமைப்பின் தோல்வி, மலேரியா, இளம்பிள்ளை வாதம், எச்ஐவி உள்ளிட்ட நோய்களின் அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளைப் பல்வேறு நாடுகள் எதிர்நோக்குகின்றன.

சுகாதார நிதியுதவி மேலும் குறைந்தால் கூடுதலாக 16 மில்லியன் பிள்ளைகள் 2045க்குள் உயிரிழக்கக்கூடும் என்றும் அறிக்கை முன்னுரைக்கிறது. 

நம்பகமான தீர்வுகளுக்கு வழங்கப்படும் சரியான முதலீடுகள் பல மில்லியன் பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றும் என்று ‘வீ கான்ட் ஸ்டோப் அட் ஆல்மோஸ்ட்’ அறிக்கை குறிப்பிடுகிறது. 

செலவைக் கட்டுப்படுத்தவேண்டிய காலகட்டத்திலும் பிள்ளைகளுக்கு உதவி செய்வதைக் கைவிடக்கூடாது என்று கேஸ்ட் அறநிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் கூறுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

“பிள்ளைகளின் நலனை நான் தொடர்ந்து எங்கு முடியுமோ, எப்படி முடியுமோ எடுத்துரைப்பேன். பல மில்லியன் பிள்ளைகளின் உயிர்கள் இந்த முயற்சியை சார்ந்துள்ளன,” என்று அவர் கூறினார்.

அறப்பணிகளுக்கான நிதியைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் ஈகையை வளர்க்கவும் அரசாங்கத்தையும் பொதுமக்களையும் அற அமைப்புகளையும் கேட்டுக்கொள்வதாகத் திரு கேட்ஸ் கூறினார்.

“பிள்ளைகள் எங்கு பிறந்தாலும் அவர்கள் வாழ, வளரத் தகுதியுள்ளவர்கள்,” என்று அவர் கூறினார். 

குறிப்புச் சொற்கள்