ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டாய் கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன் என்று ஆஸ்திரேலிய காவல்துறை கூறியுள்ளது.
யூதர்கள் கொண்டாட்டத்தின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவர் காவல்துறையினருடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதால் பலி எண்ணிக்கை 16க்கு கூடியுள்ளது. பத்து வயது குழந்தையும் இறந்தவர்களில் அடங்குவர் என்று காவல்துறை கூறியது.
சம்பவ இடத்திலேயே 50 வயது தந்தை கொல்லப்பட்டார். அவரது 24 வயது மகன் மோசமான உடல் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டிசம்பர் 15ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் காவல்துறை சொன்னது.
இறந்தவர்கள் அனைவரும் பத்து முதல் 87 வயது வரையிலானவர்கள்.
யூதர்கள் அனுசரிக்கும் ஹனுக்கா நிகழ்ச்சியில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றதாக காவல்துறை கூறியது.
ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 14) வெப்பமான மாலை நேரத்தில் உள்ளூர் நேரப்படி 6.30 மணியளவில் பல பேர் போண்டாய் கடற்கரையில் கூடியிருந்தனர். துப்பாக்கிச் சூடு சுமார் 10 நிமிடம் நீடித்தது. சத்தம் கேட்டு, அங்கிருந்த அனைவரும் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் திங்கட்கிழமை (டிசம்பர் 15) காலை போண்டாய் கடற்கரைக்குச் சென்று தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த சமயத்தில் சில யூத ஆடவர்களும் துக்கத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டிருந்தனர்.
திரு. அல்பனீஸ் முன்னதாக இந்தத் தாக்குதலை ‘நமது தேசத்தின் இருண்ட நேரம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
துப்பாக்கி உரிமத்தால் அனுமதிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை மற்றும் உரிமம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்க வேண்டும் என்பதற்கான வரம்புகளை பரிசீலிக்க அமைச்சரவையைக் கேட்டுக் கொள்வேன் என்று பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தேசிய அமைச்சரவை சட்டத்தை வலுப்படுத்த அனுமதியளித்தது.
இதற்கிடையே இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் தாக்குதலை கண்டித்துள்ளார்.

