வாஷிங்டன்: கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கவின் நியூசம் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் தாம் களமிறங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கலிஃபோர்னியாவின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இருவருக்கு இடையே ஏற்படவிருந்த உட்கட்சிப் போட்டி தவிர்க்கப்பட்டுள்ளது.
சிஎன்என் செய்தி நிறுவனத்திற்குத் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அளித்த நேர்காணலில் திருவாட்டி கமலா போட்டியிடுவது குறித்துத் திரு நியூசம் கருத்துரைத்தார்.
“அவர் போட்டியிடுவாரா என்று எனக்குத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், அவர் போட்டியிட்டால் நான் போட்டியிட மாட்டேன்,” என்றார் திரு நியூசம்.
பதவிக்கால வரம்புகள் காரணமாக மீண்டும் ஆளுநர் தேர்தலில் திரு நியூசம்மால் போட்டியிட முடியாது. இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பரிசீலித்து வருவதை வெளிப்படையாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கலிஃபோர்னியாவில் பல ஆண்டுகளாய் ஒன்றாக அரசியல் பயணம் செய்துவரும் தமக்கும் திருவாட்டி கமலாவுக்கும் இடையிலான போட்டி இருவரின் வெற்றி வாய்ப்புகளையும் குறைத்துவிடும் என்பதை அவர் சுட்டினார்.
கமலா ஹாரிஸ் இதுவரை இருமுறை அதிபர் தேர்தலில் போட்டியிட முற்பட்டுள்ளார். 2020ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வுபெற அவர் தவறினார். 2024 பொதுத்தேர்தல் பிரசாரத்தின் நடுவில் துணை அதிபராக இருந்தபோது ஜோ பைடனுக்குப் பதிலாக வேட்பாளராய்ப் பொறுப்பேற்று, பின்னர் திரு டோனல்ட் டிரம்ப்பிடம் திருவாட்டி கமலா தோல்வியடைந்தார்.
2028 அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து வருவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் திருவாட்டி கமலா கூறியிருந்தார்.

