கோலாலம்பூர்: மலேசியாவும் பிற ஆசியான் நாடுகளும் அமெரிக்கப் பயனீட்டாளர் சந்தையை மட்டுமே நம்பியிருப்பதைக் குறைக்க, வலுவான நடுத்தர வர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்று அந்நாட்டின் நிதித் துணை அமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக உற்பத்தித் திறன் விரிவடைந்துவரும் நிலையில், பொருளியல் வளர்ச்சியைத் தக்கவைக்க அதிகச் சம்பளம் கொடுப்பதும் நிறுவனங்களை உருவாக்குவதும் அவசியம் என்றார் அவர்.
மலேசியப் பொருளியல் ஆய்வுக் கழகத்தின் தேசியப் பொருளியல் கண்ணோட்ட மாநாட்டின் தொடக்கவுரையில் திரு லியூ அவ்வாறு கூறினார்.
“அமெரிக்காவை மட்டுமே நாம் எப்போதும் நம்பியிருக்க முடியாது. நம் மக்கள் வளமடைந்தால், ஒரே சந்தையைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை,” என்று திரு லியூ குறிப்பிட்டார்.
மலேசியப் பொருள்களுக்கு அமெரிக்கா 18 விழுக்காடு வரை வரி விதிக்க முன்மொழிந்ததை அடுத்து அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
“மலேசியா வெறும் வர்த்தக நாடாக இல்லாமல், சொந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். சீனாவிலிருந்து உற்பத்தியை மாற்றியமைக்கும் நிறுவனங்களுக்கு, உலகத் தொழில்நுட்ப விநியோக நடவடிக்கைகளில் மலேசியா இன்றியமையாத நடுநிலை நாடாக உருவாக வேண்டும்,” என்றார் திரு லியூ.
“பகுதி மின்கடத்தித் துறையில் மலேசியா, சிங்கப்பூர், வியட்னாம் ஆகியவை மிக முக்கியமான நடுநிலைப் பங்கை வகிக்கின்றன,” என்று அவர் கூறினார்.
தற்காப்பு, பகுதி மின்கடத்தித் துறைகளுக்கு இடையே நெருக்கமான தொடர்பு அவசியம் எனக் குறிப்பிட்ட திரு லியூ, தற்காப்புத் துறையில் வர்த்தகர்களைவிடப் புத்தாக்கவாதிகளே அதிகம் தேவை என்றார்.
வீடமைப்புத் துறைக்கு நிதியளிப்பது போல, தொழில்நுட்பத் துறையின் இடர்களை மதிப்பிட்டு நிதியளிக்க வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
