அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று உலகக் கிண்ண வரலாறு படைத்த கேப் வார்டெ

சினகல், ஈரான் இரு குழுக்களின் நிலை, இனிமேல் தெரியும்

அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று உலகக் கிண்ண வரலாறு படைத்த கேப் வார்டெ

2 mins read
ஸ்பெயின், கேப் வர்டெ, பிரான்ஸ், நார்வே, பெல்ஜியம், எகிப்து அடுத்த சுற்றுக்குத் தகுதி
8f85df58-83cd-484f-b62b-5736667857f3
கொண்டாட்டத்தில் திளைத்த கேப் வார்டெ விளையாட்டாளர்கள் - படம்: ராய்ட்டர்ஸ்

ஹுஸ்டன்: உலகக் கிண்ண வரலாற்றில் முதன்முறையாகப் போட்டிகளில் கலந்துகொண்டு அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் நாடு என்ற சாதனையை கேப் வார்டெ அணியினர் பெற்றுள்ளனர்.

சவூதி அரேபியாவுடன் சனிக்கிழமை (ஜூன் 27) நடந்த ஆட்டத்தில் 0-0 என்று சமநிலை கண்டது அக்குழு. ‘ஹெச்’ பிரிவில் ஆடிய மூன்று ஆட்டங்களிலும் (ஸ்பெயின் உட்பட) சமநிலை கண்டு மூன்று புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது கேப் வார்டெ.

முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் குழு இரண்டு வெற்றிகளையும் ஒரு சமநிலையும் அடைந்து ஏழு புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஸ்பெயின், உருகுவே உடன் ஆடிய ஆட்டத்தில் 1-0 என்ற எண்ணிக்கையில் வென்றது. எனவே இரண்டு புள்ளிகளுடன் பிரிவில் மூன்றாம் நிலையில் வந்த உருகுவே, போட்டியில் இனி தொடராது.

கடைசி நிலையில் இரண்டு புள்ளிகளுடன் உள்ள சவூதி அரேபியா போட்டியில் இருந்து வெளியேற நேரிட்டது. அக்குழு ஆடிய மூன்று ஆட்டங்களில் இரண்டில் சமநிலை கண்டு, ஸ்பெயின் உடன் இதற்கு முன் ஆடிய ஆட்டத்தில் 4-0 என்று தோல்வி அடைந்தது.

பிரிவு ‘ஐ’

பிரிவு ‘ஐ’யில் பிரான்ஸ் நார்வே குழுவை 4-1 என்ற எண்ணிக்கையில் வென்று அசத்தியது. ஆடிய மூன்று ஆட்டங்களிலும் வென்று பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது பிரான்ஸ். இரண்டாம் இடத்தில் உள்ள நார்வே ஏற்கெனவே இரண்டு ஆட்டங்களில் வென்று ஆறு புள்ளிகள் பெற்றதால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது.

பிரிவில் மூன்றாம் இடத்தில் உள்ள சினகல் குழு, ஈராக்கை 5-0 என்ற எண்ணிக்கையில் வென்றது. ஆயினும் சிறந்த மூன்றாம் இடத்தைப் பெற்ற எட்டு குழுக்களில் அது இடம்பெற்று அடுத்த சுற்றுக்குச் செல்லுமா என்பதை அனைத்து பிரிவுகளின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தால்தான் தெரியும். மூன்று ஆட்டங்களிலும் தோல்வியுற்றதால் ஈராக் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது.

பிரிவு ‘ஜி’

பிரிவு ‘ஜி’யில் பெல்ஜியம் குழு நியூசிலாந்தை 5-1 என்ற எண்ணிக்கையில் வென்று பட்டியலில் முதல் இடத்தை அடைந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இரண்டாம் நிலையில் உள்ள எகிப்து ஈரானை எதிர்த்து ஆடியதில் இரு குழுக்களும் 1-1 என்ற கோல் எண்ணிகையில் சமநிலை கண்டன. எனவே எகிப்தும் அடுத்த சுற்றுக்குச் செல்கிறது.

அதன்படி, ஈரான் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆடிய மூன்று ஆட்டங்களிலும் சமநிலை அடைந்துள்ளதால் அடுத்த சுற்றுக்குச் செல்லுமா என்பது இதர பிரிவு ஆட்டங்கள் முடிந்ததும் தெரியவரும். நியூசிலாந்து மூன்று ஆட்டங்களில் ஒன்றில் சமநிலையடைந்து இரு ஆட்டங்களில் தோல்வியுற்றதால் போட்டியில் இருந்து விலகவேண்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துசவூதி அரேபியாவெற்றிபோட்டி