மெக்சிகோவில் துயரில் முடிந்த கொண்டாட்டம்; தீயால் 23 பேர் உயிரிழப்பு

1 mins read
56a8bb54-d96f-4c8c-abea-145f1ffa35b4
ஹெர்மொசில்லோ என்ற நகரில் இருந்த கடை ஒன்றில் தீ மூண்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் வடமேற்குப் பகுதியில் வார இறுதிக் கொண்டாட்டம் ஒன்று துயரத்தில் முடிந்தது. ஹெர்மொசில்லோ வட்டாரத்தில் உள்ள கடை ஒன்றில் மூண்ட தீயில் பிள்ளைகள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் மறைந்த குடும்ப உறுப்பினர்களையும் உற்றார் உறவினர்களையும் நினைவுகூர ‘டே ஆஃப் த டெட்’ என்ற விழா அனுசரிக்கப்படுகிறது.

வண்ணமயமான கொண்டாட்டத்தின்போது தீ விபத்து நேர்ந்தது. சம்பவம் குறித்து தீர விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக சொனொரா ஆளுநர் அல்ஃபோன்சோ டுராசோ கூறினார். சம்பவத்தின்போது மாண்டோரில் பெரும்பாலோர் நச்சு வாயுவைச் சுவாசித்தனர் என்று மாநிலத் தலைமைச் சட்ட அதிகாரி குஸ்டாவோ சலாஸ் குறிப்பிட்டார்.

மெக்சிகோ அதிபர் குளோடியா ‌ஷெயின்பம் குடும்பத்தினரையும் உற்றாரையும் சம்பவத்தில் இழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டார்.

பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு உதவும்படி ஆதரவுக் குழுக்களுக்கு உத்தரவிட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

தீ மூண்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மின்சாரக் கோளாற்றால் அது நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீ மூண்ட கடை குறிவைக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்