ஜெனீவா: உலகச் சுகாதார நிறுவனத் தலைமைப் பதவிக்குக் கடைசி நேரத்தில் சீனா தனது வேட்பாளரைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகச் சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து, தனது செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்ள சீனாவிற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
உலகச் சுகாதார நிறுவனத்தின் தற்போதைய தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசுசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவுறுகிறது.
இந்நிலையில், அவரையடுத்து அப்பதவிக்குத் தாய்-சேய் நலக் கொள்கையிலும் அனைத்துலக ஒத்துழைப்பிலும் 20 ஆண்டு அனுபவம் கொண்ட மூத்த பொதுச் சுகாதார அதிகாரி சோங் லீயை முன்னிறுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
கொவிட்-19 தொற்றைக் கையாண்ட விதத்தில் சீனாவுக்குச் சாதகமாக உலகச் சுகாதார நிறுவனம் செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, உலகச் சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார். அதன்பின் அவ்வமைப்பிற்குக் கூடுதல் நிதியாதரவு வழங்குவதாக சீனா அறிவித்தது.
உலகச் சுகாதார நிறுவனத் தலைமைப் பதவிக்கான போட்டியில் சவூதி அரேபியா, பெல்ஜியம், கத்தார், போட்ஸ்வானா, இந்தோனீசியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வேட்பாளர்கள் ஏற்கெனவே களத்தில் உள்ளனர்.
முன்னதாக, 2006 முதல் 2017 வரை சீனாவின் மார்கரெட் சான் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநராகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
