மேற்குக் கரையில் குடியிருப்பு அமைப்பதை நிறுத்தும்படி இஸ்ரேலிடம் சீனா வலியுறுத்தல்

மேற்குக் கரையில் குடியிருப்பு அமைப்பதை நிறுத்தும்படி இஸ்ரேலிடம் சீனா வலியுறுத்தல்

படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2026 - 4:52 pm

2 mins read

பெய்ஜிங்: ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளைக் கட்டுவதையும் கட்டாயப்படுத்தி நிலப்பகுதிகளைக் கைப்பற்றுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்ஸோகிடம் அவ்வாறு கூறியதாகச் சீன வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

பாலஸ்தீனப் பிரச்சினை இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வரலாற்று அநீதி என்ற கருத்தில் சீனா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்பதைத் திரு வாங், திரு ஹெர்ஸோகிடம் தெரிவித்தார். இருவரும் அஸர்பைஜானில் சந்தித்துப் பேசினர்.

மத்திய கிழக்கு விவகாரத்தைப் பொறுத்தவரை, அந்தப் பகுதியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதே சீனா கொண்டுள்ள கொள்கையின் ஆதாரம் என்று திரு வாங் கூறினார்.

‘இரு நாடுகள் தீர்வு’ என்பதே பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான சரியான பாதை என்று சீனா நம்புவதாக அவர் தெரிவித்தார். காஸா பகுதிக்கு உதவிப் பொருள்கள் கிடைப்பதற்கான வழியை உடனடியாகத் திறப்பதே தற்போதைய முக்கிய முன்னுரிமை என்று திரு வாங் சொன்னார். அப்போதுதான் மனிதாபிமானப் ‘பேரழிவு’ பரவாமல் தடுக்க முடியும் என்றார் அவர்.

அதே நேரம், மேற்குக் கரையில் கட்டாயக் குடியிருப்புகளை அமைப்பதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் திரு வாங் கூறினார்.

அனைத்துத் தரப்பினரையும் சமரசப் பேச்சுக்கும் கலந்தாலோசனைக்கும் விரைவில் திரும்பச் செய்யவும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் அனைத்துலகச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றச் சீனா விரும்புகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சீனா நீண்டகாலமாகவே பாலஸ்தீனர்களின் இலக்கிற்கு ஆதரவளித்து வருகிறது. மேலும், இஸ்ரேலின் எதிரியான ஈரானுடனும் அது நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாஇஸ்ரேல்ஆக்கிரமிப்பு