கம்பியைக் கடித்துத் துப்பி, ஐஃபோன் களவாடிச் சென்ற பெண்

கம்பியைக் கடித்துத் துப்பி, ஐஃபோன் களவாடிச் சென்ற பெண்

காணொளிப்படம்: சௌத் சைனா மார்னிங் போஸ்ட்

03 Sep 2023 - 5:56 pm

2 mins read

பெய்ஜிங்: உலகில் அதிகமானோரால் விரும்பப்படும் திறன்பேசிகளில் ஒன்றாக ஐஃபோன் விளங்குகிறது.

இந்நிலையில், தன்னால் ஐஃபோன் வாங்க முடியாத நிலையில், அதனைத் திருட வித்தியாசமானதொரு முயற்சியில் இறங்கினார் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்.

தென்கிழக்குச் சீனாவின் ஃபுஜியன் மாநிலத்தைச் சேர்ந்த சியூ என்ற அப்பெண், பாதுகாப்புக் கம்பிவடத்தைப் பற்களால் கடித்துத் துண்டித்து, கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஐஃபோனைத் திருட முயன்றது காணொளியில் பதிவானது.

யாரும் எடுக்க முடியாதபடி அக்கம்பிவடத்துடன் அந்த ஐபோன் இணைக்கப்பட்டிருந்தது.

அந்த ஐஃபோனை ஒரு கையால் பிடித்தபடி, அது வைக்கப்பட்டிருந்த நிலைமேடைக்கு முன்பாக சியூ குனிவது காணொளியில் தெரிகிறது. அத்திறன்பேசியைச் சோதித்துப் பார்த்தபின், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கம்பிவடத்தை அவர் தமது பற்களால் கடிப்பதும் தெரிகிறது. அதனை முழுமையாகக் கடித்துத் துண்டித்த அவர், பின்னர் அந்த ஐஃபோனைத் தமது பைக்குள் போட்டுக்கொண்டு, கடையைவிட்டு வெளியேறினார்.

தன்னை யாரும் சந்தேகித்துவிடக்கூடாது என்பதற்காக, சம்பவ நேரம் முழுவதும், குனிந்தபடி ஐஃபோனை ஆராய்வதுபோல அவர் நடித்தார்.

ஆயினும், ஐஃபோன் திருட்டின்போது எச்சரிக்கை மணி ஒலித்ததாக அந்த விற்பனை நிலையத்தின் மேலாளர் கூறியதாக ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி தெரிவிக்கிறது.

ஆயினும், சியூவை அணுகியபோது வழக்கத்திற்கு மாறாக எதுவும் அவருக்குத் தெரியவில்லை. கடையைவிட்டு சியூ வெளியேறிய பின்னரே, கம்பிவடம் துண்டிக்கப்பட்டு ஐஃபோன் களவுபோயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Watch on YouTube

அதன்பின் கண்காணிப்புக் காணொளியை ஆராய்ந்த அதிகாரிகள் பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். குற்றம் நடந்த அரைமணி நேரத்தில் தம் வீட்டிற்கு வெளியே இருந்த சியூவைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

குறிப்புச் சொற்கள்