ஸ்டாக்ஹோம்: பரவலான ஒருங்கிணைந்த குற்றங்களை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளில் ஒன்றாக, சில குற்றக்கும்பல் தலைவர்களின் குடியுரிமையை ரத்து செய்ய அனுமதிக்கும் அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்ய சுவீடன் அரசாங்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) முன்மொழிந்தது.
கடந்த ஜனவரி மாதம், உளவு பார்த்தல் அல்லது தேசத்துரோகக் குற்றத்திற்காக இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களின் கடப்பிதழ்களைப் பறிக்க அனுமதிக்கும் அரசியலமைப்பு மாற்றங்களை அதன் நாடாளுமன்றக் குழு ஒன்று முன்மொழிந்தது. ஆனால் ஒருங்கிணைந்த குற்றங்களை இலக்காகக் கொண்ட பரிந்துரைகளை வழங்க அது தவறிவிட்டது.
“சமூகத்திற்கு மிகக் கடுமையான தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகளான கும்பல் தலைவர்களின் குடியுரிமையை ரத்து செய்வதைச் சாத்தியமாக்குவதற்காக, குழுவின் முன்மொழிவை விட அரசாங்கம் இன்னும் அதிகமாகச் செயற்படுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளது,” என்று நீதி அமைச்சர் குன்னர் ஸ்ட்ரோம்மர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
டிசம்பர் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில், குற்றக்கும்பல் புரியும் கடுமையான குற்றம் போன்ற ‘முக்கியமான தேசிய நலன்களை கடுமையாகப் பாதிக்கும் குற்றங்களில்’ ஈடுபட்ட இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் கடப்பிதழ்களை ரத்து செய்ய அனுமதிக்கும் திட்டமும் அடங்கும் என்று அவர் கூறினார்.
சுவீடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த குற்றம் தொடர்பான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
சுவீடன் அதன் அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்ய, முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் வாக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் பின்னர் இரண்டாவது வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ட்ரோம்மர் கூறினார்.

