கோலாலம்பூர்: டிக்டாக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் மலேசியாவின் புதிய சட்டத்துக்குக் கீழ் வரவிருக்கின்றன.
அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல்தேதி நடப்புக்கு வரவிருக்கும் புதிய சட்டங்களுக்கு அந்த ஊடகத் தளங்கள் கட்டுப்பட்டாக வேண்டும். இணையத் துன்புறுத்தல்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கவும் சமூக ஊடகத் தளங்களைப் பொறுப்பேற்கச் செய்யும் நடைமுறைகளை வலுப்படுத்தவும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதி அது.
எட்டு மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட அனைத்து இணையத் தகவல் தளங்களும் சமூக ஊடகத் தளங்களும் நாட்டின் புதிய உரிமக் கட்டமைப்புக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். அத்தகைய தளங்கள், தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்றவையாகக் கருதப்படும். மலேசியாவின் தொடர்புக் கட்டுப்பாட்டுத் துறை வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக், ஆல்ஃபபெட்டின் யூடியூப், டெலிகிராம் முதலியவை அத்தகைய தளங்களுக்குள் வந்துவிடும்.
நாட்டின் சட்ட, கட்டுப்பாட்டுக் கட்டமைப்புக்கு அவை முறையாகக் கட்டுப்படுவதைப் புதிய நடவடிக்கை உறுதிசெய்யும் என்று மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் தெரிவித்தது.
“பிள்ளைகளையும் குடும்பங்களையும் பாதுகாப்பதற்குரிய பொறுப்புகளை அனைத்துத் தளங்களும் ஏற்றுக்கொள்வதையும் புதிய நடவடிக்கை உறுதிசெய்யும்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
இணையத்தில் தீய பதிவுகளிலிருந்தும் பகடிவதையிலிருந்தும் சிறுவர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள பல நாடுகள் புதிய சட்டதிட்டங்களை இயற்றிவரும் நிலையில் மலேசியாவின் நடவடிக்கை வந்துள்ளது.
அத்துடன் 16 வயதுக்கு உட்பட்டோர், சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கும் கோலாலம்பூர் தடை விதிக்கவுள்ளது. அதன் தொடர்பிலான சட்டமும் அடுத்த ஆண்டு நடப்புக்கு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே ஆஸ்திரேலியா அத்தகைய சட்டத்தை உலகில் முதன்முறையாக நடைமுறைக்குக் கொண்டுவந்தது.
இந்தோனீேசியா, டென்மார்க், பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் அடுத்தடுத்து அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயாராகி வருகின்றன.

