ஜோகூர் பாரு: மலேசியா மின்சிகரெட் புழக்கம் மீதான முழுமையான தடையை நோக்கி தீர்க்கமாக நகர்ந்து வருகிறது. பொதுச் சுகாதாரத்தில், குறிப்பாக மன ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், மலேசிய சுகாதார அமைச்சு, 2026ஆம் ஆண்டுக்குள் இந்தக் கொள்கையை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறினார்.
நாடு முழுவதும் மின்சிகரெட் தொடர்பான பொருள்களைத் தடை செய்வது குறித்து அமைச்சரவை ஏற்கெனவே கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் மின்சிகரெட்டைத் தடை செய்கிறோமா இல்லையா என்பது இப்போது கேள்வி அல்ல. எப்போது அது அமல்படுத்தப்படும் என்பதுதான் முக்கியம். தடையை நோக்கி நகர்வது குறித்து அமைச்சரவை மட்டத்தில் ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) அன்று ஜோகூர் பாருவில் உள்ள பெர்மாய் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேவையான ஒழுங்குமுறை மற்றும் சட்டமியற்றும் செயல்முறைகள் நிறைவடைந்தால், 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலோ அல்லது குறைந்தபட்சம் 2025ஆம் ஆண்டின் இறுதியிலோ இந்தத் தடையை அமல்படுத்த சுகாதார அமைச்சு இலக்கு வைத்துள்ளதாக டாக்டர் ஸுல்கிஃப்லி கூறினார்.
அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயத்தை சுகாதார அமைச்சு தாக்கல் செய்யத் தவறிவிட்டது. ஆனால் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது மீண்டும் கொண்டு வரப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கலப்பட மின்சிகரெட் திரவங்கள் மற்றும் செயற்கைப் பொருள்களின் பயன்பாடு குறித்து அதிகரித்து வரும் கவலைகளை அமைச்சர் மேற்கோள் காட்டினார். அவை போதைப்பொருளால் தூண்டப்பட்ட மனநோய் மற்றும் பிற கடுமையான மனநலக் கோளாறுகளுடன் தொடர்புடையவை.
“செயற்கை கஞ்சா மற்றும் பிற பொருள்களின் பயன்பாடு காரணமாகப் போதைப்பொருளால் தூண்டப்பட்ட, மனநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்து எனக்கு முன்பே விளக்கப்பட்டது. அவற்றில் சில போதைப் பொருள் மின்சிகரெட் மூலம் உட்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரத் தலைமைத்துவத்தின்கீழ் ஒரு சிறப்புப் பணிக்குழுவால் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக டாக்டர் ஸுல்கிஃப்லி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மின்சிகரெட் தொடர்பான பொருள்களைத் தடை செய்வதற்கான நடவடிக்கை ஏற்கெனவே உள்ள சுகாதாரக் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது என்றும், அது திடீர் திசை மாற்றமல்ல என்றும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.
“இது திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. கொள்கைகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. நாம் இப்போது செய்வது ஒரு தீர்க்கமான இறுதிப் புள்ளியை நோக்கி நகர்கிறது,” என்று அவர் கூறினார்.
கடுமையான கட்டுப்பாடு குறித்தும் மின்சிகரெட் பொருள்களை இறுதியில் தடை செய்வதற்கான அவசியம் குறித்தும் மலேசிய மருத்துவச் சங்கம் உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள் அளித்த பரிந்துரைகளுடன் அமைச்சு ஒத்துப்போகிறது என்றும் அவர் விளக்கியதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

