கோலாலம்பூர்: மலேசியாவில் இதயநோய் தொடர்ந்து கவலைக்குரிய பிரச்சினையாகவும் தவிர்க்கக்கூடிய நோய்ப் பட்டியலில் முதலிடம் வகித்து வருவதாகவும் அந்நாட்டின் சுகாதார (பொதுச் சுகாதாரம்) தலைமை இயக்குநர் இஸ்முனி பொஹாரி எச்சரித்துள்ளார்.
ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் இதயநோயான இஸ்கெய்மிக் இதயநோய்தான் (ischaemic heart disease) மருத்துவ ரீதியாக உறுதிப்பட்டுள்ள மரணங்களில் இரண்டாவது ஆக அதிகமாக 15.1 விழுக்காட்டு மரணங்களுக்குக் காரணமாய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மலேசிய புள்ளி விவரப் பிரிவு வெளியிட்ட சென்ற ஆண்டுக்கான புள்ளி விவரங்களில் அது தெரியவந்ததாக அவர் கூறினார் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
41லிருந்து 59 வயதுக்கு உடபட்டோரிடையே இஸ்கெய்மிக் இதயநோய்தான் மரணங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்து வருவதும் தெரியவந்தது. பெண்களைவிட ஆண்களிடையே பாதிப்பு அதிகம்.
“இது கவலை தரும் போக்கு. காரணம், இது சுகாதாரத்தை மட்டுமின்றி நாட்டின் பொருளியலையும் பாதிக்கிறது,” என்று டாக்டர் இஸ்முனி மலேசியாவில் நடைபெற்ற உலக இதய தின நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, அதிக காலம் நீடிக்கும் மனவுளைச்சல் ஆகியவை இதயநோய் ஏற்பட முக்கியக் காரணங்களாக இருந்து வருவதாக டாக்டர் இஸ்முனி தெரிவித்தார். ஆரோக்கிய வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.