கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய 169 மில்லியன் ரிங்கிட் (S$51.76 மில்லியன்) ரொக்கம் மலேசிய அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் பல்வேறு நாணயங்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் விண்ணப்பத்தை ஏற்று, அப்பணத்தைப் பறிமுதல் செய்ய நீதிபதி சுசானா உசின் உத்தரவிட்டார்.
அக்டோபர் 1ஆம் தேதி நிலவரப்படி, பறிமுதலை யாரும் எதிர்க்கவில்லை என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எவரும் உரிமை கொண்டாடவில்லை என்றும் அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் மலேசிய ரிங்கிட், சிங்கப்பூர் வெள்ளி, அமெரிக்க டாலர், சுவிஸ் ஃபிராங்ஸ், யூரோ, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்டு, நியூசிலாந்து டாலர், டர்ஹம், ஆஸ்திரேலிய டாலர் ஆகியவை அடங்கும்.
திரு இஸ்மாயிலுக்குச் சொந்தமான 169 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கத்தைப் பறிமுதல் செய்ய ஜூலை 7ஆம் தேதியன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விண்ணப்பம் செய்திருந்தது.
பறிமுதல் விண்ணப்பத்தைத் திரு இஸ்மாயிலும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர் திரு முகம்மது அன்வார் முகம்மது யூனோசும் எதிர்க்கப்போவதில்லை என்று செப்டம்பர் 8ஆம் தேதியன்று நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.
ஊழல் குற்றம் தொடர்பாகத் திரு இஸ்மாயிலிடமும் அவரது மூத்த உதவியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களது வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அவற்றின் ஒரு பகுதியாகத் திரு இஸ்மாயிலுடன் தொடர்புடைய பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.