தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலாசாரப் பன்முகத்தன்மையே மலேசியாவின் பலம்: அன்வார்

2 mins read
e3cfaca4-9e22-4104-87ad-77159cae02ae
மலேசியாவின் தேசிய அடையாளத்தை வடிவமைத்த பல்வேறு சமூகங்களின் மரபுடைமையை ஏற்று மதிப்பதில் மலேசியாவின் மகத்துவம் அடங்கியருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: கலாசார, இனப் பன்முகத்தன்மையே மலேசியாவின் பலமாக உள்ளது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

அதைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் அதை நிராகரிக்கக் கூடாது என்றும் அவர் மலேசியர்களுக்கு நினைவூட்டினார்.

‘வாவ் மலேசியா’ எனும் மலேசிய கலாசார விழா 2025ல் கலந்துகொண்டு பேசிய திரு அன்வார், இக்கருத்துகளை முன்வைத்தார்.

இந்த நிகழ்வு தாமான் டசிக் டிட்டிவங்சாவில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்றது.

மலேசியாவின் தேசிய அடையாளத்தை வடிவமைத்த பல்வேறு சமூகங்களின் மரபுடைமையை ஏற்று மதிப்பதில் மலேசியாவின் மகத்துவம் அடங்கியிருப்பதாக பிரதமர் அன்வார் கூறினார்.

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான் இனத்தவர்கள், கடாசான் இனத்தவர்கள், முருட் இனத்தவர்கள் , மிலானாவ் இனத்தவர்கள், பஜாவ் இனத்தவர்கள் உட்பட பல்வேறு இனத்தவர்களின் பாரம்பரியத்தை ஏற்று மதிப்பளிக்கும்போது மலேசியா வலுவடைகிறது என்று திரு அன்வார் தெரிவித்தார்.

வெவ்வேறு இனங்களின் பாரம்பரியத்தை மலேசியாவின் பாரம்பரியமாகவும் கலாசாரமாகவும் அடையாளம் காணும்போது கலாசாரப் பன்முகத்தன்மை மேலோங்குகிறது என்றார் அவர்.

இந்த அணுகுமுறை மலேசியாவை வெற்றியின் பாதைக்குக் கொண்டு செல்லும் என்றும் அமைதியையும் தொடர் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் என்றும் திரு அன்வார் கூறினார்.

ஒருவரையொருவர் தனிமைப்படுத்தி, ஏற்க மறுத்தால் சமூகம் பிளவடையும் அபாயம் ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மலேசியாவின் பன்முகத்தன்மை, பல்லின மற்றும் பல சமய மக்களிடையிலான ஒற்றுமையை வெளிநாட்டுத் தலைவர்கள் மெச்சுவதாக அவர் கூறினார்.

மலேசியாவின் அதிகாரபூர்வ மொழியாக மலாய் மொழி தொடரும் என்றார் திரு அன்வார். மலாய் மொழி மலேசியர்களை ஒருங்கிணைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், மலாய்க்காரர்கள் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு அவர்களது தாய்மொழியைக் கற்று அதில் பேச உரிமை உண்டு என்றும் இதை அனைத்து மலேசியர்களும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்