ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைப் புரட்டிப் போட்ட புயல்

1 mins read
21312534-dbb7-4460-9944-b357f5d53629
டார்வின் நகருக்கும் மக்கள் தொகை அதிகம் இல்லாத டிவித் தீவுகளுக்கும் இடையே புயல் வீசியது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சீறிய காற்று, மரங்களை வேருடன் சாய்த்தது. - படங்கள்: எக்ஸ் தளம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியை ஃபீனா புயல், சனிக்கிழமை (நவம்பர் 22) இரவு புரட்டிப் போட்டது.

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சீறிய காற்று, மரங்களை வேருடன் சாய்த்தது.

அதுமட்டுமல்லாது, மின்கம்பங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் மையம் கொண்ட புயல், வலுப்பெற்று கரையைக் கடந்தது.

டார்வின் நகருக்கும் மக்கள் தொகை அதிகம் இல்லாத டிவித் தீவுகளுக்கும் இடையே புயல் வீசியது.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) புயலின் சீற்றம் சற்று குறைந்து கனமழையுடன் பலத்த காற்று வீசுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

புயல் காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நார்தன் டெரிட்டரி மாநிலத்தின் முதல்வர் லியா ஃபிரோசியாரோ கூறினார்.

பல வீடுகள் சேதமடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் உட்பட பல பொருள்கள் கிடப்பதாகவும் துப்புரவுப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஃபீனா புயல் மேற்கு ஆஸ்திரேலியாவை நோக்கிச் செல்கிறது என்றும் அது மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அது கரையைக் கடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும் நாளடைவில் அது வலு இழந்துவிடும் என்றும் ஆஸ்திரேலிய வானிலை மையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்