கோலாலம்பூர்: கண்விழி போல் உள்ள (ஐ பால்) ஜவ்வு மிட்டாய்களின் விளம்பரங்களை நீக்க இரண்டு இணைய வணிகத் தளங்களுக்கு மலேசிய சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20ஆம் தேதி பினாங்கில் 10 வயது சிறுவன் ஜவ்வு மிட்டாய் சாப்பிடும்போது அது தொண்டையில் சிக்கி மாண்டார். அதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கையை மலேசியா எடுத்துள்ளது.
சிறுவன் சாப்பிட்ட ஜவ்வு மிட்டாய் (Gummy Original Basketball Soft Candy) மலேசிய உணவு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக அமைச்சு தெரிவித்தது.
இரண்டு இணைய வணிகத் தளங்களில் 86 விளம்பரங்கள் மூலம் அந்த ஜவ்வு மிட்டாய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களை அகற்ற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) அமைச்சு உத்தரவிட்டது.
மேலும் அந்த ஜவ்வு மிட்டாய்களை இணையம் அல்லது கடைகளில் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஜவ்வு மிட்டாய் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள கடைகளில் மலேசிய அதிகாரிகள் சோதனையிடவும் அமைச்சு உத்தரவிட்டுள்ளது. கடைகளில் சிக்கும் ஜவ்வு மிட்டாய்களை பறிமுதல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.

