மகளை மீட்க மலேசியப் பெண் நடத்திய ‘நீதி கேட்கும் பயணம்’

2 mins read
768e3286-055e-42a0-ad66-fdf05d0b9805
தமது மகளுக்குப் பிடித்த ‘டெடி பேர்’ பொம்மையுடன் ஊர்வலத்தில் சென்ற எம். இந்திரா காந்தி. - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: மலேசியாவில் எம். இந்திரா காந்தி என்ற பெண்மணி தமது மகளை மீட்கும் 16 ஆண்டுகாலப் போராட்டத்தை சனிக்கிழமை (நவம்பர் 22) மீண்டும் தொடர்ந்தார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கோலாலம்பூரின் சோகோ கடைத்தொகுதி முன்னால் கூடினர். அவர்களில் பெரும்பாலானோர் கறுப்பு உடையுடன் காணப்பட்டனர்.

“’ஐஜிபி அவர்களே, எனது மகளை மீட்டுத் தாருங்கள்’, ‘16 ஆண்டுகால வேதனையை நிறுத்துங்கள்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கூட்டத்தினரில் சிலர் ஏந்தி இருந்தனர்.

பின்னர், ‘நீதி கேட்கும் பயணம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் அவர்கள் கலந்துகொண்டனர். புக்கிட் அமான் காவல்துறைத் தலைவர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றது.

திருமதி இந்திராவின் பிள்ளைகளான தேவி தர்ஷினி, 27, கரண் தினேஷ், 26, ஆகியோரும் அதில் கலந்துகொண்டனர்.

மலேசியாவின் முன்னாள் சட்ட அமைச்சர் சையத் இப்ராகிம், தற்போதைய துணை சட்ட அமைச்சர் எம். குலசேகரன் போன்ற பிரமுகர்களும் திருமதி இந்திராவுக்கு ஆதரவாக ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தினர் மத்தியில் பேசிய திருமதி இந்திரா, “ஒரு தாய் தனது மகளுக்காக ஏங்குகிறாள். வேறு எந்த ஒரு தாய்க்கும் எனது நிலைமை ஏற்படக்கூடாது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மலேசியா திறமையான காவல்துறையைக் கொண்டிருக்கும்போது எனது மகளை மீட்டுத் தருவது அவ்வளவு கடினமானதா? காவல்துறைத் தலைவருக்கும் அதிகாரிகளுக்கும் எங்களது கோரிக்கையை உரத்த குரலில் தெரிவிக்கிறோம்,” என்றார்.

பிரசானா திக்சா என்னும் பெயருடைய தமது மகளை தமது முன்னாள் கணவர் முகம்மது ரிதுவான் அப்துல்லா கடத்திச் சென்றதாகவும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது மகளை மீட்பதற்காகப் போராடி வருவதாகவும் திருமதி இந்திரா தெரிவித்திருந்தார்.

“எனது மகளுக்கு இப்போது 17 வயதாகி இருக்கும். இந்தக் கூட்டத்தில் அவள் இருந்தால்கூட என்னால் அவளை அடையாளம் காணமுடியாத அளவுக்கு காலம் கடந்துவிட்டது,” என்றார் அவர்.

கடந்த மாதம் திருமதி இந்திராவின் மகள் தொடர்பாக சமூக ஊடகத்தில் வெளியான ஒரு பதிவுக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

“2009ஆம் ஆண்டு பிரசானாவைக் கடத்திய அவரது தந்தை ரிதுவானைக் காணவில்லை என்று இதற்கு முன்னர் அதிகாரிகள் கூறினர். ஆனால், அவர் இன்னும் மலேசியாவில்தான் உள்ளார். அரசாங்கம் வழங்கும் பல உதவிகளையும் சலுகைகளையும் அவர் பெற்று வருகிறார்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ரிதுவானைத் தேடும் பணியை விரிவுபடுத்துமாறு ஈப்போ உயர் நீதிமன்றம் அண்மையில் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்