வியட்னாமின் கடலோர நகருக்கு சிங்கப்பூரிலிருந்து நேரடி விமானம்

வியட்னாமின் கடலோர நகருக்கு சிங்கப்பூரிலிருந்து நேரடி விமானம்

படம்: ராய்ட்டர்ஸ்

01 Jun 2026 - 5:23 pm

1 mins read

வியட்னாமின் கடலோர நகரான இன்ஹா டிராங்கில் விடுமுறையைக் கழிக்கத் திட்டமிடும் பயணிகள் வியட்ஜெட் விமானம் மூலம் பறக்கலாம்.

அந்தப் பயணம் டிசம்பரில் தொடங்கும் என வியட்னாமின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் திங்கட்கிழமை (ஜூன் 1) தெரிவித்தது.

டிசம்பர் 11 முதல் சிங்கப்பூருக்கும் இன்ஹா டிராங்கிற்கும் இடையில் வாரத்தில் நான்கு நாள் அது பயணச் சேவையாற்றும்.

திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்நகருக்கான விமானச் சேவையை வியட்ஜெட் நடத்தும் என்று அதன் அறிக்கை தெரிவித்தது.

வியட்னாமின் தென்-மத்திய கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அந்த நகர், அதன் மாசற்ற கடற்கரைகளுக்கும் செழுமையான கடல்சார் சூழலமைப்பிற்கும் புகழ்பெற்றது.

வியட்னாமின் ‘கடலுணவுத் தலைநகர்’ என்றும் அந்நகர் அறியப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து இன்ஹா டிராங் நகருக்கு நேரடியாக விமானச் சேவை வழங்குவதன் மூலம் வியட்னாமில் உள்நாட்டுப் பயண மாறுதலுக்கு அவசியமின்றி சொகுசுப் பயணத்தை அனுபவிக்க முடியும்.

இந்த விமானச் சேவை சிங்கப்பூருக்கும் வியட்னாம் நகரங்களுக்கும் இடையிலான வியட்ஜெட்டின் ஐந்தாவது நேரடி வழித்தடமாகும்.

ஹோ சி மின் சிட்டி, ஹனோய், ட நாங் மற்றும் ஃபு குவோக் ஆகிய இடங்களுக்கான நேரடி வழித்தடங்களில், வாரத்திற்கு 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை அந்த விமான நிறுவனம் தற்போது இயக்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்விமானச் சேவைமலிவுக் கட்டணம்