ஹனோய்: வியட்னாம் தலைநகர் ஹனோய் நகருக்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ள பா வி மலைத் தொடரின் எழில்மிகு இயற்கைச் சூழலில் புதிய சஃபாரி பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், நில அபகரிப்பு மற்றும் இயற்கை வனப்பு அழியும் என்ற அச்சத்தின் காரணமாகப் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஏறத்தாழ 300 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இத்திட்டத்துக்கு ‘சன் குரூப்’ நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 9) அடிக்கல் நாட்டியதாக அதிகாரிகள் கூறினர்.
மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலப் பறிமுதல் குறித்த புகார்களைத் தொடர்ந்து, தொடக்கத்தில் 580 ஹெக்டேராக இருந்த இத்திட்டம் 300 ஹெக்டேராகக் குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திட்டத்தைக் கண்டிக்கும் முழக்கங்கள் அடங்கிய சிவப்பு நிறப் பதாகைகளை மக்கள் தங்கள் பகுதிகளில் தொங்கவிட்டுப் போராடி வருகின்றனர். நிலத்தை இழந்து வெளியேற்றப்பட்டால் தங்களது எதிர்கால வாழ்வாதாரம் என்னவாகும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிகாரிகளின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட 4,000 பேர் இதனால் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பாதிப்புகள் குறித்து கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் அந்த மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளையில், 6.5 டிரில்லியன் டோங் ($321.5 மில்லியன்) மொத்த முதலீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 82% பகுதி பசுமை மண்டலமாகவும் நீர்நிலைகளாகவும் ஒதுக்கப்படும் என்று சன் குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சஃபாரி பூங்கா பா வி தேசியப் பூங்காவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு முற்றிலும் வெளியே அமைக்கப்படுவதாகவும் அது நிறைவடையும்போது ஆண்டுக்கு 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதோடு 1,000 பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.
இரட்டை இலக்கப் பொருளியல் வளர்ச்சியை எட்டும் நோக்கில் வியட்நாமில் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களைக் கவரவும் வளர்ச்சித் திட்டங்களை வேகப்படுத்தவும் நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படாவிட்டால், பொதுச் சேவைக்காகக் கொண்டுவரப்படும் திட்டங்கள் அதிகாரமிக்க சிலரின் கைகளுக்குச் சொத்துகளை மாற்றும் செயலாகவே பார்க்கும் சூழல் உருவாகும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
