நெகிரி செம்பிலானில் தலையிடவேண்டாம்: அன்வாருக்குத் தலைவர்கள் எச்சரிக்கை

நெகிரி செம்பிலானில் தலையிடவேண்டாம்: அன்வாருக்குத் தலைவர்கள் எச்சரிக்கை

படம்: த வைப்ஸ்

25 Sep 2026 - 5:16 pm

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் நெகிரி செம்பிலான் விவகாரங்களில் தலையிடவேண்டாம் என்று அம்மாநிலத்தின் நான்கு தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, அரசியலமைப்புச் சிறப்பதிகாரம் தொடர்பான விவகாரங்களில் தலையிடவேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

1959ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டத்தின் 10ஆம் 11ஆம் பிரிவுகளின்படி மாநில ஆளுநரை நியமிக்கவும் பதவியிலிருந்து விலக்கவும் தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை சிராம்பானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) அவர்கள் குறிப்பிட்டனர்.

மாநில நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்க அமைப்புகள் மூலம் மேற்கொள்வதற்கு எதிராகப் பிரதமர் அன்வாரையும் அவர்கள் எச்சரித்தனர்.

“உங்கள் எல்லையைமீறி தேவையில்லாத இடத்தில் அத்துமீறி நுழையவேண்டாம். மத்திய அரசாங்க அமைப்புகளைப் பயன்படுத்தி எங்கள் மாநிலத்தில் சீர்குலைவை விதைத்து மாநில அரசாங்கத்தை முடக்கிவிடவேண்டாம்,” என்று தலைவர்கள் குறிப்பிட்டனர்.

எந்த அரசியல் கட்சிக்கும் நெகிரி செம்பிலான் ஆளுநரை நீக்க அதிகாரம் இல்லை என்று சுட்டிய அவர்கள், உரிய இடத்தில்தான் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நெகிரி செம்பிலானைப் பொருத்தவரை நான்கு தலைவர்களிடமும் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினர்.

நெகிரி செம்பிலானின் பாரம்பரிய வழக்கங்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடிக்கப்படுவதைச் சுட்டிய அவர்கள், அதன் பாதுகாவலர்களான தங்களிடம்தான் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
நெகிரி செம்பிலான்தலைவர்அரசியலமைப்புஎச்சரிக்கை