இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலப் பெருந்திட்ட வெளியீட்டை இனியும் தாமதப்படுத்த வேண்டாம் என்று ஜோகூர் மாநில அரசு மலேசிய அரசை வலியுறுத்தியுள்ளது.
மேலும் தாமதப்படுத்துவது மாநிலத்தின் முதலீட்டு வேகத்தைப் பாதிப்பதோடு, மதிப்புமிக்க வாய்ப்புகளையும் இழக்கச் செய்யும் என்று ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காசி எச்சரித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதமே நிறைவடைந்த இந்தப் பெருந்திட்டம், டிசம்பரில் நடைபெறவுள்ள தலைவர்கள் சந்திப்பின்போது வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய முதலீட்டுச் சூழலில் போட்டி அதிகரித்து வருவதால், இந்தத் திட்டத்தை விரைந்து வெளியிட மாநில அரசு விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தத் தாமதங்களால் ஜோகூர் தனது முதலீட்டு வேகத்தையும் வாய்ப்புகளையும் இழப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்று கோட்டா இஸ்கந்தரில் உள்ள மாநிலச் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற 2027ஆம் ஆண்டிற்கான ஜோகூர் மாநில வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் நிறைவுரையின் போது திரு ஓன் ஹஃபிஸ் கூறினார்.
ஜோகூரின் முதலீட்டு ஈர்ப்புத் திறன் தரவு மையங்களைத் தாண்டியும் விரிவடைந்துள்ளதாகக் கூறிய அவர், 2024 முதல் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் மூலம் 15,000க்கும் மேற்பட்ட உயர் ஊதியப் பணியிடங்கள் உட்பட கிட்டத்தட்ட 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
பகுதி மின்கடத்தி, தொழில்துறை தானியக்கம், பசுமை எரிசக்தி, மருத்துவத் தொழில்நுட்பம், மின்னிலக்கத் தொழில்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளே வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முக்கிய உந்துசக்தியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாவட்டத்தையும் அதன் பலம் மற்றும் தொழில்துறை திறனுக்கு ஏற்ப மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஜோகூர் பொருளியல் உருமாற்றத் திட்டத்தின் மூலம், பரந்த பொருளியல் வளர்ச்சியை மாநில அரசு முன்னெடுத்து வருவதாகவும் ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வளர்ச்சியைக் குவிக்காமல், தரமான வேலைவாய்ப்புகள் மற்றும் சிறந்த வருமானம் மூலம் பொருளியல் வாய்ப்புகள் எல்லா ஜோகூர் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.
