தோக்கியோ - ஜப்பானிய மீட்புப் பணியாளர்கள் மூன்று மாதங்களுக்கு முன் புதைகுழியில் சிக்கிய கனரக வாகன ஓட்டுநரின் சடலத்தை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (மே 2) தெரிவித்தார்.
ஜனவரி பிற்பாதியில் யஷியோ நகரில் பரபரப்பான காலை நேரத்தில் ஏற்பட்ட புதைகுழியில் கனரக வாகனத்தை ஓட்டிய 74 வயது ஆடவர் வாகனத்துடன் உள்ளே விழுந்தார்.
துருப்பிடித்த சாக்கடை குழாய்களால் 16 மீட்டர் ஆழத்துக்கு புதைகுழி உருவானது என்று பிப்ரவரியில் கண்டறியப்பட்டது.
நிலையற்ற நிலத்தால் மீட்புப் பணிகள் தடைபட்டன. புதைகுழி மேலும் பெரிதாகக்கூடும் என்ற அச்சத்தாலும் ஓட்டுநர் இருந்ததாக நம்பப்படும் இடத்தை மீட்புப் பணியாளர்களால் சென்றடைய முடியாமல் போனது.
அதிலிருந்து புதைகுழி கிட்டத்தட்ட 40 மீட்டர் அகலம், அதாவது கிட்டத்தட்ட ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவுக்கு விரிவடைந்தது.
புதைகுழியில் ஒரு சரிவை ஏற்படுத்தி கனமான மீட்புக் கருவிகளை அதில் மீட்புப் பணியாளர்கள் இறக்கினர். துருப்பிடித்த குழாய்களிலிருந்து நீர் கசிவதைத் தவிர்க்க கிட்டத்தட்ட 1.2 மில்லியன் குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக குளிப்பதையும் துணி துவைப்பதையும் நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
“கனரக வாகனத்துக்குள் ஆடவர் ஒருவர் இருந்ததைக் கண்டுபிடித்து அவரின் மரணத்தை உறுதிசெய்தோம். பின் காவல்துறையிடம் அந்தச் சம்பவத்துக்கான பொறுப்பை ஒப்படைத்தோம்,” என்று உள்ளூர் தீயணைப்புப் பிரிவுப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மாண்டவரின் அடையாளத்தை உறுதிசெய்த காவல்துறை அதிகாரிகள், விசாரணை தொடர்வதாகத் தெரிவித்தனர்.
ஜப்பானில் புதைகுழிகள் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2022ஆம் ஆண்டு ஏறக்குறைய 10,000 புதைகுழிகள் ஏற்பட்டன. அவற்றுள் பெரும்பாலானவை நகர்ப்புறங்களில் உள்ள சாக்கடைகளுடன் தொடர்புடையவை என்று நில அமைச்சு விசாரணைத் தெரிவித்தது.