மலேசிய ஆகாயப்படைத் தளத்தில் போதைப்பொருள் கடத்தல்: அறுவர்மீது குற்றச்சாட்டு

மலேசிய ஆகாயப்படைத் தளத்தில் போதைப்பொருள் கடத்தல்: அறுவர்மீது குற்றச்சாட்டு

படம்: த ஸ்டார்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

27 Nov 2026 - 6:09 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகிலுள்ள சுபாங் ஆகாயப்படைத் தளத்தில் போதைப்பொருள் கடத்தியதாக ராணுவ வீரர்கள் மூவர்மீதும் பொதுமக்களில் மூவர்மீதும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கமான சோதனையின்போது ஐந்து பயணப் பெட்டிகளிலும் ஒரு பெட்டியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96.64 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இம்மாதத் தொடக்கத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில், ஆகாயப்படை வீரர்கள் மேலும் நால்வர் மீதும் பொதுமக்களில் மேலும் மூவர்மீதும் இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் 15 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரான ஆகாயப்படை விமானி, தீபகற்ப மலேசியாவிலிருந்து போர்னியோ தீவின் சாபா மாநிலத்திற்குப் போதைப்பொருளைக் கொண்டுசென்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2024 ஆகஸ்ட் முதல் ஆகாயப்படை வசதிகளைப் பயன்படுத்தி மூன்று டன் போதைப்பொருள் கடத்தப்பட்ட 21 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் மதிப்பு 156 மில்லியன் மலேசிய ரிங்கிட் (48.79 மில்லியன் வெள்ளி) ஆகும்.

இச்செயல் பாதுகாப்பு, தற்காப்பு அமைப்புகளின் நேர்மைக்கு அச்சுறுத்தல் என்றும் கும்பலின் தலைவரை அடையாளம் கண்டாலும் அவரை இன்னும் கைது செய்யவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

1980களில் அமைக்கப்பட்ட சுபாங் தளம் வெளிநாட்டுப் பிரமுகர்களை வரவேற்கவும், 2024ல் காஸா போரில் காயமடைந்த 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களின் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்