விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு: தாய்லாந்து அதிரடி

விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு: தாய்லாந்து அதிரடி

1 mins read
62682fd0-4ad1-408c-8ac5-3c6d2cd6316d
விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தவும் கண்காணிப்புக் குறைபாடுகளைக் களையவும் உளவுத்துறைத் தகவல்களையும் அதிநவீனத் தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைக்க தாய்லாந்துப் போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேங்காக்: ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களைத் தொடர்ந்து, தாய்லாந்து விமான நிலையங்கள் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சு தீவிரமாக மாற்றியமைத்து வருகிறது.

விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தவும் கண்காணிப்புக் குறைபாடுகளைக் களையவும் உளவுத்துறைத் தகவல்களையும் அதிநவீனத் தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் தாய் ஏர்வேஸ் ஊழியர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் புகாரில் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சுங்கத்துறை, போதைப்பொருள் ஒழிப்பு வாரியம் மற்றும் குடிநுழைவுத் துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான குறுகியகால மற்றும் நீண்டகாலக் கட்டுப்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, விமான ஊழியர்கள் மற்றும் அவர்களின் பயணப் பெட்டிகளைச் சோதிக்கும் முறைகள் பயணிகளுக்கு நிகராகக் கடுமையாக்கப்படும். உரிய அனுமதியின்றி பிறரிடமிருந்து பொருள்களைப் பெறுபவர்கள் மீதும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சந்தேகத்திற்குரிய நடத்தைகளைக் கண்டறியும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்புத் திறனும் மேம்படுத்தப்படவுள்ளது. நீடித்த பாதுகாப்பு நடவடிக்கையாக, பயணிகளின் விவரப் பதிவுகளைப் பயன்படுத்தி இடர் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளது.

மேலும், சுங்கத்துறை மற்றும் குடிநுழைவுத் துறையின் தரவுத்தளங்களை ஒன்றிணைக்கவும் பயணப்பெட்டிகளைப் பதிவு செய்யும் செயல்பாட்டில் போலி ஆள்மாறாட்டங்களைத் தவிர்க்க அங்க அடையாளத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துவிமான நிலையம்போதைப்பொருள்