ஹனோய்: வியட்னாம் அரசாங்கம் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் வாழும் குடிமக்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க அனுமதிக்கும் தேசியச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரித்துள்ளது. வியட்னாமுக்கு இன்னும் கூடுதலான திறனாளர்களை ஈர்க்கும் முயற்சியாக அந்த முடிவு எடுக்கப்பட்டது.
வியட்னாம் குடியுரிமை பெற விரும்புவோர் வெளிநாட்டுக் குடியுரிமையைக் கைவிடவேண்டும் என்று கூறும் நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாக நிக்கெய் ஏஷியா சொன்னது.
மொழித் திறன், குறைந்தபட்ச குடியுரிமைத் தகுதிகள் ஆகியவற்றையும் நீக்குவதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டன.
வியட்னாம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் ஆகப் பெரிய சீர்திருத்தத்தை எதிர்கொள்கிறது. அதன் சட்டங்கள், அரசாங்கக் கட்டமைப்புகள் போன்றவை மாற்றப்படுவதோடு பொருளியல் வளர்ச்சிக்காக முதலீட்டு நடைமுறைகளும் தளர்த்தப்படுகின்றன.
வியட்னாம் அதன் பொருளியல் வளர்ச்சி விகிதத்தை இவ்வாண்டு 8 விழுக்காடாக உயர்த்துகிறது. இனிவரும் ஆண்டுகளில் இரட்டை இலக்கு வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கும் வியட்னாம் 2045ஆம் ஆண்டுக்குள் அதிக வருவாய் ஈட்டும் நாடாக உருமாற இலக்குக் கொண்டுள்ளது.
வியட்னாம் தலைவர்கள் வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாக அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கருதுகின்றனர். ஆனால் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கும் தனிநபர்கள் அங்கு இல்லை.