தோக்கியோ: ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் ((JMA) சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையை முதலில் அறிவித்தது, பிறகு அதனை மீட்டுக்கொண்டுள்ளது. நிலநடுக்கம் சிங்கப்பூர் நேரப்படி முற்பகல் 10.44 மணிக்கு (ஜப்பானில் 11.44 மணி) ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை வடகிழக்குப் பகுதிகளில் நடந்த 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியுள்ளது.
தேசிய ஊடகமான என்ஹெச்கே (NHK) சுனாமியால் எவ்வித பாதிப்பையும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளது. அதற்கு சற்று முன்னதாக வெள்ளிக்கிழமையன்று சப்போரோ நகரைத் தலைநகராகக் கொண்ட ஹொக்கைடோ மாகாணத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளில் சிறிய அளவிலான கடல் அலைகளே காணப்பட்டதாக அறியப்படுகிறது.
ஜப்பானின் அணுசக்தி ஆணையம் நாட்டின் அணுஆலைகள் வழக்க நிலையில் இருப்பதை உறுதிசெய்துள்ளது.
ஜப்பானில் உள்ள சிங்கப்பூர் தூதரகம், அங்குள்ள சிங்கப்பூரர்களை கடல் மற்றும் ஆறுகள் இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளூர் நிலையை கண்காணித்து அதிகாரிகள் விடுக்கும் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கும் படியும் அறிவுரை வழங்கியுள்ளது.

