பொருளியல்: உலகின் முதல் 30 நாடுகளுக்குள் வர மலேசியா இலக்கு

2 mins read
7ad8405b-0c28-49a4-9e80-252f65dcc21a
மலேசிய நாடாளுமன்றத்தில் 13வது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: பொருளியல் அடிப்படையில், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் முன்னணி ஆசிய நாடுகளில் ஒன்றாகவும் உலகின் முதல் 30 நாடுகளுக்குள் ஒன்றாகவும் உருவெடுக்க மலேசியா இலக்கு கொண்டுள்ளது.

கிழக்கத்திய பண்பாட்டிலும் அறிவிலும் வேர்விட்டுள்ள தனது சொந்த அடையாளத்தைக் கொண்டு அவ்விலக்கை எட்டவும் அது முயலும்.

அதற்கு, மதிப்புருவாக்கம் சார்ந்த பொருளியலுக்கு மாறுவதையும் தொழில்முனைப்பை ஊக்குவிப்பதையும் முடுக்கிவிட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

“பயனீட்டாளராக அல்லாமல், தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடாக நாம் விளங்க வேண்டும். மலேசியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த பொருள்களைத் தயாரிக்கவும் சேவைகளை வழங்கவும் வேண்டும்,” என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ‘13வது மலேசியத் திட்டம் (13எம்பி) 2026-2030’ அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், உள்ளூர்த் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மின்னிலக்க உருமாற்றத்திலும் கவனம் செலுத்தி, நாட்டின் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“இப்போது, செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு தலைமுறைக்கான வாய்ப்பு நம்முன் உள்ளது. அதனை நாம் தவறவிட்டுவிடக்கூடாது. செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கத் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் முன்னணித் தென்கிழக்காசிய நாடாகவும் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாகவும் திகழ மலேசியா தெளிவான பாதையை வகுத்துள்ளது,” என்று திரு அன்வார் கூறினார்.

பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்க உள்ளூர்த் தொழில்நுட்பப் புத்தாக்கத்திற்கு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, மின்னிலக்க அரசாங்க அமைப்புகள் போன்றவற்றில் உத்திபூர்வ மின்னிலக்கச் சொத்துகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இவ்வாய்ப்பைக் கைக்கொள்ளும் வகையில், ‘செயற்கை நுண்ணறிவைப் பரந்த அளவில் பயன்படுத்த ஏதுவாக உள்ளூர்த் திறனாளர் மேம்பாடு, ஆராய்ச்சி, தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குதல் ஆகியவற்றுக்கு ‘தேசிய ஏஐ செயல்திட்டம் 2030’ ஒரு வினையூக்கியாக அமையும் என்றும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்